பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 3வது சுற்று, மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), செர்பியா வீராங்கனை ஒல்கா டேனிலோவிக் (24) உடன் மோதினார்.
இப்போட்டியில் அபாரமாக ஆடிய சபலென்கா, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டையும், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்திய சபலென்கா, அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை க்வின்வென் ஸெங், கனடா வீராங்கனை விக்டோரியா வெனெஸா போகோ உடன் மோதினார்.
இப் போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில், ஸெங் வெற்றி வாகை சூடினார். மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமண்டா கேய் விக்டோரியா அனிசிமோவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாவ்சன் உடன் மோதினார். முதல் செட்டை கடும் போராட்டத்துக்கு பின் அமண்டா கைப்பற்றினார். 2வது செட்டும், அவர் வசமே வந்தது. அதனால், 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அமண்டா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
* ஆடவர் பிரிவில் முஸெட்டி அபாரம்
ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, இத்தாலியை சேர்ந்த உலகின் 8ம் நிலை வீரர் லொரென்ஸோ முஸெட்டி, அர்ஜென்டினா வீரர் மரியானோ நவோனி உடன் மோதினார். முதல் செட்டை பறிகொடுத்த முஸெட்டி, அடுத்த 3 செட்களையும் எளிதில் கைப்பற்றினார். அதனால், 4-6, 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற முஸெட்டி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.