திருமலை: தண்டவாளத்தை இளம்பெண் ஒருவர் கடந்தபோது திடீரென சரக்கு ரயில் வந்ததால் தண்டவாளம் இடைவெளியில் படுத்துக்கொண்டு உயிர் தப்பிய அபூர்வ நிகழ்வு நடந்துள்ளது. இந்த காட்சிகள் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் நாவந்த்கி ரயில் நிலையத்தில் பழங்குடியின பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியாக சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
மிக அருகில் வந்து விட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அந்த பெண் உடனடியாக தண்டவாளத்தின் நடுவில் படுத்துக்கொண்டு கை, கால்களை மடக்கிக்கொண்டார். ரயில் செல்லும் வரை உடலை அசைக்காமல் அப்படியே படுத்திருந்தார். சரக்கு ரயில் அவரை கடந்து சென்றது. அப்போது மயங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை மயக்கம் தெளிய வைத்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று சமூக வளைதளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.