பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பகல் 12.07 மணிக்கு ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 747 கோடி மதிப்பிலான 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள் எதுவுமில்லாமல், மக்களுக்கு செயல்படுத்துவதாக அறிவித்த ஐந்து உத்தரவாத திட்டங்களுடன் புதிய திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவித்தார். விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் தொடர்பாக மாநில அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசின் அனுமதி பெற முயற்சி மேற்கொள்வதுடன், திட்டம் செயல்படுத்த தேவையான நிலம் கையகப்படுத்தும் முயற்சி தொடங்கப்படும். மாநில அரசின் சார்பில் புதியதாக செயல்படுத்தும் கிரகஜோதி, கிரகலட்சுமி, பெண்கள் சக்தி, யுவசக்தி மற்றும் அன்னபாக்யா ஆகிய ஐந்து திட்டங்கள் செயல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ரூ.52 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த செலவை ஈடுகட்டுவதற்காக மதுபானங்கள் மீதான வரி உயர்த்தப்படுகிறது. இதனால் ரூ.50 ஆயிரம் கோடி ஆண்டுக்கு கிடைக்கும். மதுபானங்கள் விலை உயர்ந்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கர்நாடகாவில் விலை குறைவாகவே இருக்கும். இவ்வாறு முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டில் அறிவித்தார்.
* தேசிய கல்வி கொள்கை ரத்து
பட்ஜெட் உரையின் போது முதல்வர் சித்தராமையா கூறுகையில், ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் மாநிலத்தில் பாஜ ஆட்சியில் பாட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை நீக்கி, மாணவர்களுக்கு உண்மையான வரலாற்றை தெரிவிக்கும் பாடங்கள் சேர்க்க வசதியாக தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும். விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலுக்கு விரோதமாக பாஜ ஆட்சியில் கொண்டுவந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும். நந்தினி மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களை இந்தியா மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஜீரோ சதவீத வட்டியில் வழங்கி வரும் பயிர் கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்’ என்றார். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்கு கொடுத்த ஐந்து வாக்குறுதிகள் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ரூ.52 ஆயிரம் கோடி, மாநிலத்தில் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழில் பிரிவில் பணியாற்றுவோர், பெண்கள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை என ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 747 கோடி மதிப்பிலான 2023-24ம் நிதியாண்டு கர்நாடக பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.