திருவள்ளூர்: தண்ணீர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா தயாளன் கலெக்டர் த.பிரபு சங்கரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சியில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 2 எஸ்.டி., 2 எஸ்சி மற்றும் 1 எஸ்சி இன மாற்றுத்திறனாளி குடும்பம் என மொத்தம் 5 குடும்பங்கள் வீட்டுமனை மற்றும் வீடு இல்லாமல் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால் அவர்களுக்கு வீட்டு மனை மற்றும் வீடு வழங்க வேண்டும். இதேபோல் தண்ணீர்குளம் ஊராட்சி பழங்குடியினர் மக்கள் ஆதிவாசிகள் காலனி பகுதியில் வசிக்கும் 38 பேருக்கு வீட்டு மனை பட்டா கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும். வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவர்களால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளதால் தாங்களே ஆர்சிசி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்குத் தேவைகளை இந்த பகுதியில் அமைத்து எஸ்டி காலனியாக மாற்றி தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். அப்போது முன்னாள் ஊராட்சித் தலைவர் தயாளன், ராஜன், ராஜமூர்த்தி, அமலநாதன், மகேந்திரன், அன்புதாஸ், முரளி, ஆல்பர்ட் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.