சென்னை: நாம் பிரிந்து இருப்பதற்காக சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகம் செய்யவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் என் மண்… என் தேசம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மருது சகோதர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம். அவர்கள் செய்த தியாகத்தை மறந்துவிட்டோம். நமக்கு கிடைத்த சுதந்திரத்தை தாராளமாக எடுத்துக்கொண்டோம். சுதந்திர போராட்டம் 1801ல் தொடங்கியது; இந்த மண்ணில் தொடங்கியது. சுதந்திரம் மிக எளிமையாக கிடைக்கவில்லை; மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தோம்.
ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரத்திற்காக இழந்து உள்ளனர். சுதந்திரம் கிடைத்ததற்கு பின்பு கூட மௌண்ட் பேடன் பிரபு போன்றவர்கள் பொறுப்பில் இருந்து உள்ளனர். ஒரே தேசத்தில் நாம் பிரிந்து உள்ளோம்; ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு வருகிறோம். நாம் பிரிந்து இருப்பதற்காக சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகம் செய்யவில்லை. மதரீதியாக, ஜாதி ரீதியாக இன்று நாம் சண்டை போட்டுக் கொள்கிறோம் இதுதான் நமது சுதந்திர இந்தியாவா? நாம் அனைவரும் ஏன் ஒரே குடும்பமாக இருக்க முடியவில்லை? என கேள்வி எழுப்பினார்.
இன்று பாரத நாட்டை அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இடத்தில் இருக்கிறோம். நாம் அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். நம் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துக் கொள்ளுங்கள், அது திருக்குறள், திருமந்திரம் என அனைத்தையும், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.