இன்று 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய ஆலயங்கள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். பின் நாட்டு மக்களுக்காக சுதந்திர தின உரையாற்றுகிறார். நடப்பாண்டுக்கான சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள், ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஒத்திகை நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. பாதுகாப்புத்துறையின் முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்சிசி உள்ளிட்ட மாணவர் படையும் பங்கேற்றன.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ேபாலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் டிரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான செயற்கை நுண்ணறிவு கேமராக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. செங்கோட்டை பகுதி மட்டுமின்றி விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தேசியக்கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திர தின உரையாற்றுகிறார். தகைசால் தமிழர் விருது, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவையாற்றியவருக்கு விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிக்கிறார்.
இந்திய அளவில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களை சிறப்பாக நடத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தை பொறுத்தவரை குடியரசு தினம் (ஜன. 26), உலக தண்ணீர் தினம் (மார்ச் 22), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக. 15), காந்தியடிகள் பிறந்த தினம் (அக். 2), உள்ளாட்சிகள் தினம் (நவ. 1) என ஆண்டுதோறும் 6 முக்கிய தினங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. எம்பி தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கடந்த மே 1ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் மொத்தம் 12,525 ஊராட்சிகள் உள்ளன.
சுதந்திர தினமான இன்று, அனைத்து ஊராட்சிகளிலும் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்களை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இன்று கூட்டங்கள் நடைபெற உள்ளன. இவற்றில் கிராமங்களில் குடிநீர் வரி உள்ளிட்ட வரவு – செலவு விவரங்கள் உள்பட பல விஷயங்கள் விவாதிக்கப்படும். சுதந்திர தின விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வந்தாலும், சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீத்தவர்களின் நினைவையும் இன்று நாம் போற்ற வேண்டும். பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க வேண்டும். நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் நாம் இன்னும் தீவிரமாக களமிறங்க வேண்டும்.