சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் கொழுப்பு மிகு கல்லீரல் நோய் விழிப்புணர்வு பயிற்சி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 3வது பொதுவான இறப்பிற்கு காரணமாக விளங்குகின்ற ஒரு பெரிய நோய், நீடித்த நுரையீரல் அடைப்பு நோய். கொழுப்பு மிகு கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, ஆரம்ப நிலை பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முதல்வர் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு சிறப்பான திட்டம் ஒன்று மிக விரைவில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் பெயர் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’. பொருட்செலவு இல்லாமல் முழு உடற்பரிசோதனைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள் சிறப்பு மருத்துவ வசதிகளோடு பெரிய அரங்குகள் அமைக்கப்பட இருக்கிறது. முழு உடற்பரிசோதனை மக்களைத் தேடி, மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று பரிசோதனைகள் செய்யும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்புகள் என்பது பெரிய அளவில் பயப்பட வேண்டியதில்லை.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 216. இவர்களுக்கு 3 நாள் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளோடு குணமடைந்து விடுகிறார்கள். தொடர்ந்து இந்த பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பெரிய அளவில் பதற்றப்பட தேவையில்லை. பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள், வயது மூத்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றவர்கள் முகக் கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.