ஈரோடு: விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கு மீண்டும் காட்டன் நூல் தருவதாக அரசு உறுதி அளித்த நிலையில் ஈரோடு விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது . விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கு மீண்டும் காட்டன் நூல் தருவதாக அரசு உறுதி அளித்துள்ளது. விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்கு இந்த ஆண்டு பாலியஸ்டர் நூல் வழங்க அரசு முடிவு செய்து டெண்டர் அறிவித்திருந்தது.
பாலியஸ்டர் நூல் வழங்கினால் உற்பத்தி செய்வதில் பிரச்சனை ஏற்படும் என உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்திருந்தனர். காட்டன் நூல் வழங்குவது தொடர்பாக விசைத்தறியாளர்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் ஈரோட்டில் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்தை விசைத்தறியாளர்கள் ரத்து செய்தனர்.
விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கு காட்டன் நூல் வழங்க அரசாணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும் அரசு உறுதி அளித்தது. அரசின் விலையில்லா சேலையை காட்டன் நூல் மூலம் உற்பத்தி செய்ய வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்து அதற்கு மாற்றாக விசைத்தறியாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக மாற்றினர்.