பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கல்வி மாவட்டத்தில், 100 சதவீத மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வருவாய் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
அதுபோல இந்த ஆண்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பொள்ளாச்சி வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர் தாலுகாக்கள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 153 மேல்நிலை பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க இலவச சைக்கிள் ஒரு மாதத்திற்கு முன்பே தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், சுமார் 10 நாளுக்கு முன்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. பல்வேறு பள்ளிகளுக்கும் வெவ்வேறு கட்டமாக வழங்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும். கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு, வழங்கினார். கோட்டூரில் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு, வழங்கினார். அரசின் இலவச சைக்கிள் பெற்ற மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர். இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி வருவாய் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் துவங்கப்பட்டது.
சைக்கிள் வழங்கும் பணி விரைந்து நடைபெற்றதன் காரணமாக, இதுவரை 99 சதவீத மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 153 மேல்நிலை பள்ளிகளிலும் சேர்த்து மாணவர்கள் 6,929 பேருக்கும், மாணவிகள் 10 ஆயிரத்து 29 பேருக்கு என மொத்தம் 17,270 பேருக்கு இலவச சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை 16 ஆயிரத்து 979 மாணவ, மாணவிகளுக்கு என 99 சதவீதம் பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கும் விரைந்து வழங்கி, 100 சதவீதம் சைக்கிள் விநியோகம் நிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தனர்.