ராசிபுரம்: ராசிபுரம் சுயேச்சை கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது ரூ.2.49 கோடி காசோலை மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ள பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி 12வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சசிரேகா. இவரது கணவர் சதீஷ். இவருக்கும், நாமக்கல் அடுத்த மோகனூரைச் சேர்ந்த திமுக பேரூர் செயலாளர் செல்லவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சதீஷ் கடந்த 2020ல், சதீஷ் ஏரியல் ட்ரோபோடிக்ஸ் என்ற பெயரில் மொத்த வியாபாரம் செய்வதாகவும், ஹெலிகாப்டரை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, சுற்றுலா தொழில் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்பவர்களுக்கு சலுகை விலையில் கார் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அதுகுறித்த சில தகவல்களை தனது செல்போனில் காண்பித்துள்ளார். அதனை செல்லவேல் நம்பி, கடந்த 2020 டிசம்பர் 29ம் தேதி, புதிய இன்னோவா கார் வாங்கி தரும்படி, சதீஷ் மற்றும் அவரது மனைவி சசிரேகாவிடம் ரூ.17.70 லட்சம் கொடுத்துள்ளார். மேலும், வங்கி பண பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், சதீஷ் கூறியபடி எந்த தொழிலும் செய்யவில்லை, காரும் வாங்கித் தரவில்லை. இதுகுறித்து செல்லவேல் கேட்ட போது, சதீஷ் காசோலையை கொடுத்துள்ளார். அதனை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், செல்லவேல் புகாரளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணைக்கு வரும்படி, சதீஷ் மற்றும் சசிரேகாவுக்கு சம்மன் அனுப்பியும், இருவரும் காலம் தாழ்த்தியுள்ளனர். இந்நிலையில், நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் சசிரேகாவை அழைத்து சென்று, 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, கணவரை அழைத்து வந்து, பணத்தை திருப்பி தருவதாக ஒரு தேதியை குறிப்பிட்டு எழுதி கொடுத்து விட்டு, சசிரேகா திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சதீஷ் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்ப காலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்த சதீஷ், பல இடங்களில் நிலம் வாங்கி, அவற்றுக்கு முறையாக பணம் செலுத்தாமல் இருந்துள்ளார். மேலும், பங்குதாரர்களிடம் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காண்பித்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், ராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு அண்ணாச்சி மசாலா கம்பெனி என ஆரம்பித்து மசாலா, பதப்படுத்தப்பட்ட குழம்பு வகைகளை தயார் செய்து விற்பனை செய்வதாகவும், மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யவும், உள்ளூரில் விநியோகம் செய்யவும், விநியோகஸ்தர் உரிமம் தருவதாக கூறி, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பலரிடம் வசூல் செய்து விட்டு, அந்த நிறுவனத்தையும் மூடி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிலர், சேலம் மற்றும் நாமக்கல் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தவிர, நாமக்கல்லில் ஹெலிகாப்டர் தளம் அமைத்து நாமக்கல், கோவை, பெங்களூரு, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு, குறைந்த கட்டணத்தில் சேவை செய்வதாகவும் கூறி, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து சிலரிடம் வசூல் செய்துள்ளார். இதேபோல், ட்ரோன் மூலம் வெளிமாநில வேளாண்மை வளர்ச்சி திட்டங்களை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி அதிக லாபம் ஈட்ட முடியும் எனக்கூறி, பல்வேறு தனியார் கல்லூரிகளுடன் சதீஷ் ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.