சோழிங்கநல்லூர்: ஒரே வீட்டை இருவருக்கு விற்பனை செய்து ரூ.95 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் யூனியன் கார்ப்பரேட் காலனி 91வது தெருவை சேர்ந்தவர் கவுரி (55). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் குணசேகரன், மீன்பிடி படகு தயார் செய்யும் வேலை செய்கிறார். மீன் வியாபாரம் செய்யும் போது கம்ரூன் நிஷா என்பவர் மூலம் அவரது மகன் பிலால் என்பவர் கவுரிக்கு அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், பிலாலுக்கு சொந்தமான கொடுங்கையூர் யுனைடெட் காலனியில் உள்ள 3800 சதுர அடி உள்ள வீட்டை கடந்த 2012ம் ஆண்டு கவுரி வாங்கியுள்ளார். இதற்காக கவுரி, பிலாலுக்கு ரூ.95 லட்சம் கொடுத்துள்ளார். பத்திரவு பதிவு செய்ய ஏற்பாடு நடந்தபோது, பிலாலின் 2 மகள்கள் மைனர் என்பதால் மேஜரானதும் பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம், என கூறி பொது அதிகார பத்திரத்தை கவுரியிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, கவுரி குடும்பத்துடன் புதிய வீட்டில் குடியேறிவிட்டார். இந்நிலையில், கவுரிக்கு தெரியாமல் கடந்த ஜனவரி மாதம் அதே வீட்டை பிரகாஷ் என்பவருக்கு ரூ.95 லட்சத்திற்கு விற்பனை செய்த பிலால், அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த விவரம் கவுரிக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து பிலாலிடம் கேட்க சென்றபோது அவர் தலைமறைவானது தெரிந்தது. இதுகுறித்து 10வது குற்றவியல் நீதிமன்றத்தில் கவுரி மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீடு விற்பனை செய்து மோசடி செய்தது குறித்து விசாரிக்கும்படி கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிலால் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.