மதுராந்தகம்: 6 சென்ட்டுக்கு பணம் வாங்கி, 5 சென்ட் பத்திரம் பதிந்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மருத்துவர், இருவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் மருத்துவர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் பத்ரிலால்சேட், டெல்லியை சேர்ந்த அரிசிக்சேட் ஆகியோரிடம் கடந்த 2022ம் ஆண்டு 6 சென்ட் வீட்டுமனை வாங்கி பத்திர பதிவு செய்துள்ளார். இதன்பிறகு அந்த இடத்துக்கு தனது பெயரில் பட்டா வாங்குவதற்காக ரவிச்சந்திரன் வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகியுள்ளார்.
இதையடுத்து, பட்டா வழங்குவதற்காக அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர். இதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள், ‘கடந்த 2017ம் ஆண்டு நீங்கள் குறிப்பிட்ட 6 சென்ட் இடத்தில் ஒரு சென்ட் இடத்தை நெடுஞ்சாலைத்துறை எடுத்துக்கொண்டது’ என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தகவலை மறைத்து 6 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்து பணம் மோசடி செய்திருப்பது தெரிந்ததும் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். இதன்பிறகு அதிகாரிகள் தெரிவித்தபடி 6 சென்ட்க்கு பதில் 5 சென்ட் நிலம் மட்டுமே உள்ளதால் ஒரு சென்ட் இடத்திற்கான பணத்தை திரும்ப கேட்டால் அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதாவது, அரிசிங்சேட், பத்ரிலால் சேட் ஆகியோர் 1 சென்ட் ஏழேகால் லட்சம் என்று விலை பேசி 6 சென்ட் இடத்துக்கு சுமார் ரூ.40 லட்ச வரை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளனர்.இது குறித்து டாக்டர் ரவிச்சந்திரன் மதுராந்தகம் டிஎஸ்பி மேகலாவிடம் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்துள்ளார். இதனை பெற்று கொண்ட போலீஸ் அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்துள்ளார்.