புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன். இவர் கடந்த ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பிரபல ஸ்டீல் கம்பெனி விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில், மார்க்கெட் விலையை விட 10 சதவீதம் குறைவாக டிஎம்டி கம்பிகள் தருவதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சேதுராமன் அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். ஜி.எஸ்.டி எண், வங்கி கணக்குகள் இருப்பதை உறுதி செய்த அவர் ரூ.30.97 லட்சத்துக்கு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டர் செய்து 4 நாட்கள் ஆகியும் பொருட்கள் வரவில்லை.
அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. இதையடுத்து சேதுராமன் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர்கள் பீகாரில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மற்றும் தனிப்படையினர் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு சென்று ஐந்து பேர் கும்பலை கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் பீகாரை சேர்ந்த ராகுல்குமார் சிங் (30), உத்தம் விஷால்குமார் (24), ராயுஷன்குமார் (24), அபிஷேக்குமார் (27) மற்றும் பெங்களூருவை சேர்ந்த தயாந்த் (30) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 40க்கும் மேற்பட்ட செல்போன், லேப்டாப், டேப் மற்றும் ரூ.34 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை பீகார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடி கும்பல் பல குழுக்களை உருவாக்கி, அதற்கு தலைவர்களை நியமித்து இந்தியா முழுவதும் கடந்த 2019 முதல் முகநூலில் போலி விளம்பரங்களை செய்து ரூ.100 கோடி வரை மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலில் செயல்ப்பட்டு வந்த பலர் பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.