பெரம்பூர்: சென்னை ஆழ்வார் திருநகர் நேரு வீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் விக்னேஷ் (33). தி.நகரில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலம் வடபழனி திருநகரில் லீசுக்கு வீடு பார்த்துள்ளார். அப்போது, ஆன்லைன் மூலமாக பெரவள்ளூர், ராம்நகர் 1வது தெருவை சேர்ந்த மேகநாதன் (49) என்பவர் அறிமுகமானார். இவர், தனக்கு வடபழனி திருநகரில் வீடு உள்ளதாகவும், அதை ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்திற்கு லீசுக்கு விட உள்ளேன், என தெரிவித்துள்ளார். இதையடுத்து, பல்வேறு தவணைகளில் ஸ்ரீராம் விக்னேஷ் ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம் 6ம் தேதி, மேகநாதனுக்கு சொந்தமான வீட்டில் ஸ்ரீராம் விக்னேஷ், குடிபெயர்ந்துள்ளார். 2 மாதம் கழித்து அவரது வீட்டிற்கு வந்த வங்கி அதிகாரிகள், இந்த வீட்டின் மீது, மேகநாதன் ரூ.50 லட்சம் கடன் பெற்று, செலுத்தாததால், வீட்டை ஜப்தி செய்யப் போகிறோம். ஏற்கனவே இது சம்பந்தமாக வழக்கு கடந்த ஒரு வருடமாக நடந்து, நீதிமன்ற ஆணை பெற்றுள்ளோம், என்று கூறி வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்து விட்டு வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் விக்னேஷ், இதுபற்றி மேகநாதனிடம் கேட்டபோது, சிறிது சிறிதாக பணத்தை திருப்பித்தருவதாக கூறியுள்ளார்.
ஆனால், ரூ.72 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். மீது பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுபற்றி ஸ்ரீராம் விக்னேஷ், திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். பின்னர், 5வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மோசடியில் ஈடுபட்ட மேகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருவிக நகர் போலீசாருக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து பணத்தை திருப்பித்தராமல் தலைமறைவாக இருந்த மேகநாதனை நேற்று திருவிக நகர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.