இன்றைய இந்தியா, டிஜிட்டல் இந்தியா. பெரும்பாலான சேவைகளை ஆன்லைனிலோ, செல்போன் ஆப்ஸ் மூலமோ பொதுமக்கள் பெறலாம். இந்த டிஜிட்டல் புரட்சி வங்கி சேவைகளில் சற்றே அதிகம். வங்கிக்கும் போக வேண்டாம், ஏடிஎம் மையங்களுக்கும் செல்ல வேண்டாம். ஒரு ஸ்மார்ட் கைபேசி இருந்தால் போதும், எங்கிருந்தாலும் வங்கி சேவைகளை எளிதாக பெற முடியும். அத்தோடு, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே சென்று பொருட்களை வாங்கவும், பயணிக்கவும் வழி செய்துள்ளது. டீக்கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் கூட இன்றைக்கு கூகுள் பே மூலம் பணத்தை பெறுகிறார்கள். அதே நேரத்தில் டிஜிட்டல் சேவைகளால் ஏமாற்றப்படும், மோசடி செய்யப்படும் வாசகர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வங்கிகளின் டிஜிட்டல்மயம் வரமா? சாபமா? என்ற முடிவே தெரியாத விவாதம் ஒருநடந்து கொண்டிருக்கிறது.
வங்கிகள் வசதியானவர்களுக்கு மட்டும் என்றிருந்தது ஒரு காலம். இன்றைக்கு வங்கி கணக்கு இல்லாத குடும்பங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்காக வங்கி கணக்கு துவங்கியவர்கள் பல கோடி பேர். இதுபோதென்று ஜன்தன் வங்கி கணக்கு என்னும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை இலக்கு நிர்ணயித்து தெருவில் நடந்து செல்பவர்களையெல்லாம் மடக்கி வங்கியில் கணக்கு ஆரம்பிக்க செய்தது ஒன்றிய அரசு. ஒரு காலத்தில் வங்கியில் பணம் போட வேண்டும் என்றால் நாம் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைக்கு நேரில் சென்று செலான் நிரம்பி பணத்தை காசாளிடம் கொடுக்க வேண்டும்.
இதே நடைமுறைதான் பணம் எடுப்பதற்கும். ஏடிஎம்கள் வந்ததும் பணம் எடுப்பதற்கு வங்கிக்கு போக தேவையில்லை என்ற நிலை உருவானது. அதே நேரத்தில் 24 மணி நேரத்தில் எப்போது வேணடுமானாலும் பணம் எடுக்கலாம் என்பதால் ஏடிஎம்களுக்கு மவுசு கூடியது. அதன் பிறகு டிஜிட்டல் மயம் துவங்கியது. இன்றைக்கு எதற்குமே வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. பணம் போட கூட இயந்திரம் வந்துவிட்டது. அதே நேரத்தில் இந்த டிஜிட்டல் யுகத்தில் மோசடிகளும் அதிகரித்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளும், நடுத்தர மக்களும் அதிலும் குறிப்பாக முதியோரும் தான்.
ஒழுங்கா, வங்கிக்கு போய் பணம் எடுத்த காலம் வரை முதியோருக்கு பெரிய பாதிப்பு இல்லை. பென்ஷன் காசை எடுக்க வங்கியில் கால் கடுக்க காத்திருந்தபோது, சக வயதானவர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அந்த வலி கூட பறந்துபோய்விடும். அத்திபூத்தாற்போல உங்க சட்டையிலே காக்கா எச்சம் போய்விட்டது என்று கூறியோ, சில 10 ரூபாய் தாள்களை சிதறி விட்டு கவனத்தை திசைதிருப்பியோ அந்த முதியோரிடம் பணத்தை அபேஸ் செய்த நிகழ்வுகள் நடைபெறும். ஆனால், இந்த டிஜிட்டல் காலத்தில் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் நொடி பொழுதில் ஆன்லைன் மூலம் சுரண்டப்படும் சோகம் தொடர்கதையாகிவிட்டது.
வயதான காலத்தில் வந்த எஸ்.எம்எஸ். கூட படிக்க தெரியாமல், வங்கிக்கு போய் பாஸ்புக் பிரிண்ட் போட போகும்போதுதான் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் மோசடி கும்பல் மொத்தமாக ஸ்வாகா செய்துவிட்டது தெரியவரும். வாழ்நாள் சேமிப்பை பறிகொடுத்த அந்த பெரியவர்கள் மனம் என்ன பாடுபடும். புது ஏடிஎம் கார்டு வருகிறது, வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டும் ஓ.டி.பி நம்பரை சொல்லுங்க என்று கேட்டு மோசடிகள் அரங்கேறுகிறது. கடந்த 2014 ஜனவரி முதல் கடந்த 2022 டிசம்பர் வரை இப்படி நடந்த ஆன்லைன் மோசடிகள் எண்ணிக்கை 3,39,534. டெபிட் கார்டு மோசடி மூலம் ரூ.507 கோடி அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இண்டர்நெட்பேங்கிங் மோசடி மூலம் அப்பாவி மக்கள் இழந்தது ரூ.354 கோடி என்று ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இப்படி பணத்தை சுரண்டுவது பீகார் கும்பலா, உ.பி கும்பலா அல்லது நைஜீரியா கும்பலா என்பதை கண்டுபிடிப்பதற்கு சைபர் கிரைம் போலீசுக்கு மிகுந்த மெனக்கெட வேண்டி உள்ளது. ஏனென்றால் போலீசிடம் இருக்கும் தொழில்நுட்பத்தைவிட மோசடி கும்பலிடம் நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் யாருக்கு லாபம் என்று பார்த்தால் அது வங்கிகள் மற்றும் மோசடி பேர்வழிகளுக்குதான். சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணம் மூலம் வங்கிகள் கிட்டதட்ட ரூ.1,60,000 கோடி வரை தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து உள்ளன.
இதில், எஸ்.எம்.எஸ் சேவை, நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் முறை ஏ.டி.எம்களை பயன்படுத்தியதற்காக ரூ.14,543 கோடியை ஏழை பாழைகளிடம் இருந்து வங்கிகள் பறித்துள்ளன. டிஜிட்டலில்தான் மோசடி சுரண்டல் என்று பயந்து மீண்டும் வங்கிக் கிளைகளுக்கு செல்ல முயன்றால், பல வங்கிகள் பணம் எடுக்கவும் போடவும் கட்டணம் கூட வசூலிக்க தொடங்கிவிட்டன. ஏமாற்றப்படுவோம் என்று தெரிந்தும் வேறு வழியின்றி டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இப்படி ஏழை, நடுத்தர மக்களிடம் இருந்து பறித்த பணத்தை வங்கி நிரவாகம் என்ன செய்கிறது தெரியுமா? வழக்கம் போல் பெரும் பண முதலைகளுக்கு கடனாக வாரி வழங்குகிறது. அந்த கடனும் சில ஆண்டுகளில் வராக் கடனாக மாறி தள்ளுபடி செய்யப்பட்டு விடுவதுதான் சோகத்திலும் சோகம்.
* இந்தியாவில் மொத்த வங்கி கிளைகள் 1,62,904
* அரசு வங்கிகள் 90,445
* தனியார் வங்கிகள் 30,179
* கிராம வங்கிகள் 42,280
* 9 ஆண்டுகளில் நடந்த டிஜிட்டல் மோசடிகள் 3,39,534
* டெபிட் கார்டு மோசடி 1,40,736
* கிரெடிட் கார்டு மோசடி 1,37,237
* ஆன்லைன் மோசடி 61,561
* சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணம் மூலம் வங்கிகள் கிட்டதட்ட ரூ.1,60,000 கோடி வரை தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து உள்ளன.
* இதில், எஸ்.எம்.எஸ் சேவை, நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் முறை ஏ.டி.எம்களை பயன்படுத்தியதற்காக ரூ.14,543 கோடியை ஏழை பாழைகளிடம் இருந்து வங்கிகள் பறித்துள்ளன.
* டிஜிட்டல் பரிவர்த்தனையால் கரையும் பணம்
டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் பணத்தின் மதிபபு கரையும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் டிஜிட்டர் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுதான். உதாரணமாக, ஒருவர் ஒரு பொருளை ரூ.100ஐ ரொக்கமாக கொடுத்து கடைக்காரரிடம் வாங்குகிறார். அவர் அந்த ரூ.100ஐ மொத்தவியாபாரியிடம் கொடுப்பார். அவர் அதை உற்பத்தியாளருக்கு தருவார். அவரோ, மூலப்பொருள் சப்ளை செய்பவருக்கு அந்த 100 ரூபாயை கொடுப்பார். இங்கே, நூறு ரூபாயின் மதிப்பு எங்கேயும் குறையவில்லை. அதே நேரத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அதே ரூ.100 கை மாறும்போது, வங்கிகள் கமிஷன், சேவை கட்டணம் வசூலிக்கும். இப்படி 4 முறை பணம் கைமாறும் போது அதன் மதிப்பு ரூ.90 ஆகிவிடும். இப்படி பணத்தை மதிப்பை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கரைத்துவிடுகிறது.