சிவகாசி: இடம் வாங்கி தருவதாக ரூ.51 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (48). சிவகாசியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம், திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த பாஜ அரசு தொடர்புத்துறை மாவட்டச் செயலாளரும், நில புரோக்கருமான சத்தியராஜ் (40), அய்யாசாமி உட்பட 3 பேர் சிவகாசி – விருதுநகர் ரோட்டில் ஆமத்தூர் அருகில் 5 ஏக்கர் நிலத்தை ரூ.4 கோடியே 5 லட்சத்துக்கு வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதை உண்மை என நம்பிய ஈஸ்வரன் கடந்த மாதம் 21ம் தேதி ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். 29ம் தேதி நிலப்பத்திர பதிவுக்கு ரூ.41 லட்சம் செலவாகும் என்று கூறி அந்த தொகையை சத்தியராஜூம், அய்யாசாமியும் பெற்றதாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்று சென்றவர்கள் பத்திரப்பதிவுக்கு அழைக்காததால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன், சத்தியராஜை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது போன் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன் உறவினர்கள் சிலரை அழைத்து கொண்டு ஆலாவூரணியில் உள்ள சத்தியராஜ் வீட்டிற்கு சென்று பத்திரப்பதிவு குறித்து கேட்டுள்ளார். அப்போது சத்தியராஜ், ஈஸ்வரனை யார் என்றே தெரியாது என கூறி உள்ளார். இதனையடுத்து ஈஸ்வரன் திருத்தங்கல் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சத்தியராஜ், அய்யாசாமி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திருத்தங்கல் – விருதுநகர் சாலையில் வாகனச் சோதனையின் போது சத்தியராஜை போலீசார் கைது செய்தனர்.