திருமலை: வெளிநாடுகளில் 600 பேரிடம் மோசடி செய்து இந்தியாவில் 6 ஆட்டோ டிரைவர்களின் வங்கி கணக்குக்கு ரூ.175 கோடி அனுப்பிய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சம்ஷீர்கஞ்ச் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த பிப்ரவரி மாதம் 6 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதையறிந்த தேசிய சைபர் க்ரைம் அதிகாரிகள், உடனடியாக தெலங்கானா மாநில சைபர் க்ரைம் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட 6 பேரின் வங்கி கணக்கில் மட்டும் பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அந்த 6 பேரும் ஆட்டோ டிரைவர்கள் என தெரிந்தது. இவர்களது வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பணபரிவர்த்தனை நடப்பது எப்படி? என அதிகாரிகள் அவர்களை வங்கிக்கு அழைத்து விசாரித்தனர். விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. 6 பேரின் வங்கி கணக்கையும் ஐதராபாத் விஜய்சாய் நகரை சேர்ந்த முகமதுசுகேல்தக்கீர் (34), முகமதுபின்அகமது பவஜீர் (49) ஆகிய இருவர் கையாள்வதும், இதற்காக 6 பேருக்கும் கமிஷன் கொடுக்கப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், ஆட்டோ டிரைவர்கள் 6 பேரிடமும் வங்கி கணக்கு விவரங்களை பெற்று துபாயில் இருந்து பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். இதற்காக சில ஆயிரங்களை மட்டும் கமிஷனாக 6 ஆட்டோ டிரைவர்களுக்கு கொடுத்துள்ளனர். குறிப்பாக துபாய், இந்தோனேஷியா, கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 600 பேரின் வங்கி கணக்கில் சுமார் ரூ.175 கோடியை அபகரித்து ஆட்டோ டிரைவர்களின் வங்கி கணக்குக்கும் அனுப்பியுள்ளனர். அதனை கிரிப்டோ கரன்சி மூலம் வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு அனுப்பியதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், வெளிநாடுகளில் நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்து சைபர் கிரைம் மூலம் பல கோடி ரூபாயை மோசடி செய்து அதனை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் அதனை இங்குள்ள சிலர், கிரிப்டோ கரன்சி மூலம் மீண்டும் வெளிநாட்டில் உள்ள அதேநபரின் கணக்கில் பணம் முதலீடு செய்துள்ளனர். இதற்காக முகமது சுகேல் தக்கீர் உள்ளிட்ட 2 பேருக்கும் பல கோடி ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது. ஆனாலும் 6 ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சிலருக்கு சில ஆயிரங்கள் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஒட்டுமொத்தமாக கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.