Wednesday, December 11, 2024
Home » நான்கு நாமங்களை மறக்க வேண்டாம்

நான்கு நாமங்களை மறக்க வேண்டாம்

by Porselvi

பெரியாழ்வார் பாடிய பாசுரங்களில் ஒரு அருமையான பாசுரம்
துப்புடை யாரை அடைவ தெல்லாம்
சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன்
ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது
அங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மேல் பள்ளிகொண்ட எம்பெருமானே! ஸர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில் தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ உன்னை அடைந்தது? அக்காலத்தில் கஜேந்திராழ்வானைக் காத்தருளியவராதலால் அவரைப் போல் அடியேனையுங்காத்தருள்வீரென்று தேவரைச் சரணம் புகுந்தேன் மரணத் தறுவாயில் அடியேன் உன்னை நினைக்க மாட்டேன் (உடம்பு நலியும் காலத்தில் பகவானோ பகவான் நாமமோ நினைவுக்கு வராதல்லவா) அதனால் கை, கால், போன்ற உறுப்புக்கள் நன்றாக இருக்கும் இப்போதே சொல்லி வைத்தேன்’’ என்கிறார்.

பகவானின் நாமங்களை நாம் மரணத்தறுவாயில் சொல்லலாம் என்று நினைக்காது, நன்றாக இருக்கும் போதே சொல்ல வேண்டும்.பகவானின் நாமங்கள் எண்ணற்றது. “பேராயிரம் உடைய பெரியோன் என்று ஆழ்வார் பகவானின் எண்ணற்ற திருநாமங்களை சொல்லுகின்றார். ஆனால் ஆயிரம் என்பது எண்ணிக்கையை மட்டும் குறிப்பிடாது எண்ணற்றவை என்பதையும் குறிப்பிடும். எதிர்காலத்தில் பகவானுக்கு ஒரு பக்தன் ஒரு பெயரை வைத்தாலும் கூட அந்தப் பெயரை பகவான் ஏற்றுக்கொள்கிறார். இத்தனைப் பெயர்கள் இருந்தாலும் கூட நாம் 12 நாமங்கள் என்று துவாதச நாமங்களை மிக முக்கியமாகக் கருதுகின்றோம். தமிழ் மாதங்கள் 12 இந்த 12 மாதங்களுக்கும் பகவானுடைய 12 பெயர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் ஆழ்வார்கள் 12 நாமங்களுக்கும் பன்னிரு திருநாமப் பாட்டு என்று ஒரு பதிகத்தை செய்திருக்கிறார்கள். அதில் 12 பாசுரங்கள் இருக்கும். ஒவ்வொரு பாசுரமும் ஒரு நாமத்தின் பெருமையைக் குறிப்பதாக இருக்கும். இந்த 12 நாமங்களில் நான்கு நாமங்களை நாம் தவறாமல் சொல்ல வேண்டும்.

1. ஹரி 2. கேசவன் 3. கோவிந்தன்
4. மாதவன்.

இந்த நான்கு நாமங்களையும் நாம் மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். காலை எழுந்தவுடன் ஹரி: என்ற நாமத்தைச் சொல்லித்தான் எழ வேண்டும் மார்பிலே கைவைத்து ஹரி ஹரி ஹரி என்று ஏழு முறை உச்சரிக்க வேண்டும் இதை ஆண்டாள் ‘‘முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து’’ என்று பாடுகின்றார். இந்த ஹரி நாமத்தைச் சொல்லுகின்ற பொழுது எத்தனை ஆற்றாமை இருந்தாலும், அந்த ஆற்றாமைகள் நீங்கி மனது குளிர்ந்து இருக்குமாம். குளிர்ச்சி என்பது தெளிவைக் காட்டுகின்றது எனவே தூங்கி எழும்பொழுது இந்த நாமத்தைச் சொல்லுவதன் மூலமாக அந்த நாள் முழுவதும் நமக்கு நன்மையைச் செய்கின்ற நாளாக இருக்கும் பாவங்கள் சேராது. காரணம் ஒரு முறை ஹரி என்ற நாமத்தைச் சொன்னால் அது பாவங் களை எல்லாம் போக்கிவிடும் பாவங்கள் சேராத பொழுது மனதில் குழப்பங்கள் இல்லாமல் இருக்கும் செயல்களில் ஊக்கம் பிறக்கும் அதனால் வெற்றி கிடைக்கும் அதனால் காலையில் எழுந்த வுடன் ஹரி என்கிற நாமத்தை ஏழு முறை சொல்லுங்கள்.

அடுத்து வெளியில் போகின்ற பொழுது நம்முடைய செயல்களில் வெற்றி கிடைக்க வேண்டும்.நாம் ஒருவரைப் பார்க்கப் போகின்றோம் என்று சொன்னால் அவர் அன்று வீட்டில் இருக்க வேண்டும். நம்முடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்க வேண்டும். நம்முடைய காரியத்தை அவர் மூலம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதற்கு வெளியில் செல்லுகின்ற பொழுது கேசவ என்கிற நாமத்தைச் சொல்ல வேண்டும். கேசவ என்கிற நாமம் மிக அற்புதமானது ‘‘கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ’’ என்று ஆண்டாள் இந்த திருநாமத்தை மிக உயர்ந்த நாமமாகச் சொல்லுகின்றார். கேசவன் என்கிற சப்தத்திற்கு அழகான கேசங்களை உடையவன் என்று ஒரு பொருள். கேசி என்கின்ற குதிரை முக அசுரனைக் கொன்று ஒழித்தவன் என்று ஒரு பொருள். மூன்றாவதாக மனதில் ஏற்படும் கிலேசங்களை நாசம் செய்பவன் என்று ஒரு பொருள். அதனால்தான் இளங்கோவடிகள் ‘‘கேசவன் சீர் கேளாத செவி என்ன செவியே?’’ என்று கேசவ நாமத்தை மிக உயர்த்தியாகச் சொன்னார். கேசவ நாமத்தை சொன்னால் விரோதிகள் அழியும். பகை நீங்கும். நட்பு மலரும். செயல்களில் வெற்றி கிடைக்கும். நாம் ஒரு காரியத்திற்கு போவதற்கு முன்னரே அந்த காரியங்களில் ஏற்படக்கூடிய தடைகளை எல்லாம் இந்த கேசவ நாமம் முன்னாலேயே சென்று தடுத்து நமக்கு வெற்றியைத் தரும்.

உணவைச் சாப்பிடும் பொழுது பகவானை நினைத்துத்தான் சாப்பிட வேண்டும் நாம் நம்முடைய உடம்புக்கு உணவைச் சாப்பிடுவதாக நினைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. நம்முடைய மனதுக்குள் அந்தர்யாமியாக இருக்கக்கூடிய பகவானுக்கு, இந்த உணவை நான் நிவேதனம் செய்கின்றேன். அவன் என்னுடைய ஆன்மாவைக் காப்பாற்றுவார் என்கின்ற உணர்வோடு, நான் பகவத் சமர்ப்பணமாக உணவை எடுத்துக் கொண்டால் உணவினால் ஏற்படுகின்ற தோஷங்கள் குறைந்து நமக்கு மிகச்சிறந்த ஆரோக்கியம் ஏற்படும். உணவு நல்ல முறையில் செரிமானமாகும். கோவிந்த என்கிற நாமம் மிக மிக உயர்வானது. மறுபிறப்பை நீக்குவது. எனவே உணவினால் வருகின்ற உயர்வைப் பெறுவதற்கு, உண்ணும் பொழுது கோவிந்த நாமத்தை சொல்லச் சொல்லி பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அதைப்போலவே படுக்கைக்குச் செல்லுகின்ற பொழுது நாம் ஓரிரு நிமிடம் தியானம் செய்து பகவானைச் சிந்திக்க வேண்டும். ‘‘பகவானே இந்த நாள் நன்றாக கழிந்தது. உன்னால் எனக்கு பலவிதமான நன்மைகள் ஏற்பட்டது. நாளைய தினமும் இதைப் போன்று நன்மை ஏற்பட வேண்டும். என்னை நன்றாகப் படைத்ததற்கு நன்றி செலுத்துகின்றேன்’’ என்று நம்முடைய நன்றி அறிதலை நம்முடைய தியானத்தின் மூலமாக செலுத்த வேண்டும்.

தூங்குகின்ற பொழுது கிழக்கிலே தலை வைத்தோ அல்லது மேற்கிலோ தலை வைத்துப்படுப்பதோ சிறந்தது தெற்கில் கூட தலை வைத்து படுக்கலாம் ஆனால் வடக்கே தலை வைத்து படுப்பது கூடாது. அழுக்குப் படுக்கையிலோ, அழுக்கான இடத்தில் போட்ட படுக்கையிலோ படுப்பது தரித்திரத்தைக் கொடுக்கும். படுக்கை தூய்மையாக இருக்க வேண்டும். படுப்பதற்கு முன்னாலே திருமாலையும் திருமகளையும் இணைத்துச் சொல்லும் மாதவ என்கிற நாமத்தைச் சொல்ல வேண்டும். காலையில் எழும்போது ஹரி, வெளியே செல்லும் பொழுது கேசவன், உணவு உண்ணும்போது கோவிந்தன், படுக்கையில் படுக்கும் போது மாதவன் என்கின்ற இந்த நான்கு நாமத்தையும் நாம் தினசரி நம்முடைய வாழ்க்கையிலே மறக்காமல் சொல்ல வேண்டும்.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi