திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13.69 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகளை கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம், நெமிலி அகரம் – மேல்விளாகம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தாழ்வான மண்சாலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சாலை வழியாக நெமிலி அகரம், களியனூர், மேல்விளாகம், ஆட்டுப்பாக்கம், விடையூர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வந்தனர். இந்நிலையில் மழைக்காலம் மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மழை நீரால் இந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மண் சாலை மூழ்கி வெள்ளத்திலேயே அடித்துச் செல்லப்படுகிறது.
இதனால் ஆற்றின் குறுக்கே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆற்றைக் கடக்க 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. எனவே இந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே செல்லும் மண்சாலையை அகற்றி விட்டு புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கிராம பொதுமக்கள், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அவரது தீவிர முயற்சியால் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.13.69 கோடி மதிப்பில் அப்பகுதியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு உயர் மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், ஒன்றிய சேர்மன் வெங்கட்ரமணா, துணை சேர்மன் மகாலட்சுமி மோதிலால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மணிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் திமுக மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன், ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டி, ரமேஷ், அரிகிருஷ்ணன், மகாலிங்கம், முன்னாள் நகர மன்ற தலைவர் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சிட்டிபாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோதிலால், மாவட்ட கவுன்சிலர் சிவசங்கரி உதயகுமார், ஒன்றிய நிர்வாகிகள் பாஸ்கர், சித்ரா ரமேஷ், தேவேந்திரன், சௌக்கார் பாண்டியன், டில்லிபாபு, நேதாஜி, கொப்பூர் திலீப்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சுலோச்சனா மோகன் ராவ், விஜி, சுபாஷினி பாஸ்கர், மஞ்சு லிங்கேஷ், ரெஜினா மோசஸ், ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.