சென்னை: சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) சான்றிதழ் பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் 8 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. தெற்காசியாவிலேயே முதன்முறையாக நடைபெறுகிற பார்முலா 4 கார் பந்தயம் போட்டி இன்றும், நாளையும் சென்னை தீவுத்திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை ஏறக்குறைய 9 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.
இதையடுத்து மழை காரணமாக சென்னை தீவுத்திடலில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எஃப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 4 மணிநேர கால நீட்டிப்பு வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) சான்றிதழ் பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் 8 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். FIA சான்றிதழ் கிடைத்த பின்பே பந்தயம் நடத்தப்படும் என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. எஃப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறப்பட்டு, அதை அடுத்து இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.