ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னபொன்னேரி அரியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(41), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கவுரி. சக்கரவர்த்திக்கும், இவரது தாய்மாமன் திம்மராயனுக்கும் நில பிரச்னை இருந்து வந்தது. கடந்த பிப்ரவரி 17ம் தேதி அரியான் வட்டம் பகுதியில் உள்ள நிலத்தில் திம்மராயன் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த சக்கரவர்த்திக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திம்மராயனை வெட்டிக்கொலை செய்த சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட சக்கரவர்த்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் காஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடுவதற்காக அங்கேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்த சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி கவுரி இருவரும் நேற்று அதிகாலை மீண்டும் காஞ்சிபுரம் செல்ல ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பஸ் நிறுத்தம் சென்றனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு கார் சக்கரவர்த்தி மீது மோதியதில் கீழே விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கும்பல், சக்கரவர்த்தியை கத்தியால் சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற அவரது மனைவி கவுரியையும் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து மர்ம கும்பல் காரில் ஏறி தப்பியது. தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சக்கரவர்த்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார். தகவல் அறிந்த எஸ்பி ஸ்ரேயாகுப்தா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து டிஎஸ்பி சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் கிராமத்தில் காரில் சென்ற கொலையாளிகளை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் நிலத்தகராறில் வக்கணம்பட்டியை சேர்ந்த திம்மராயன் வெட்டிக்கொல்லப்பட்டதால், அவரது மகன் பரத்(24), பழிக்கு பழி தீர்க்க நண்பர்களான வக்கணம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன்(24), ஜோலார்பேட்டை வசந்தகுமார்(23), அக்பர் பாஷா(21), திப்புசுல்தான்(20) ஆகிய 4 பேருடன் சேர்ந்து திட்டம் தீட்டி சக்கரவர்த்தியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பரத் உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.