சென்னை: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜ்பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.
இன்று காலை நடக்கும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். விழாவில் இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜ்பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த உழவூரில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் கே.ஆர்.நாராயணன். அவரது தந்தை ஆயுர்வேத மருத்துவர்; தீண்டப்படாத சமூகமாக விலக்கிவைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவர் மட்டும்தான் மேற்கொண்ட மருத்துவப் பணிகளின் காரணமாக ஓரளவு மதிப்புடன் நடத்தப்பட்டிருக்கிறார்.
என்றாலும் வறுமையின் பிடியிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. வறுமைச் சூழலுக்கு நடுவே பள்ளிப் படிப்பை முடித்த நாராயணன், திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உதவித்தொகையோடு கோட்டயத்தில் கல்லூரி புகுமுக வகுப்பை நிறைவுசெய்தார். தொடர்ந்து, திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹானர்ஸ்), எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்) பட்டங்களைப் பெற்றார்.
டாடா அறக்கட்டளையின் மாணவர் உதவித்தொகையோடு லண்டன் பொருளாதாரப் பள்ளியில் அரசறிவியல் பயிலச் சென்றார். லண்டனில் அவருடன் படித்த மற்றொரு மாணவர் பின்னாட்களில் இந்தியாவின் மிகப் பெரும் பொருளியலாளரான கே.என்.ராஜ். லண்டனில் மாணவராக இருந்தபடியே தனது பத்திரிகையாளர் பணியையும் நாராயணன் தொடர்ந்தார்.