Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.10 லட்சத்தை திருப்பி கேட்டதால் பெண்ணை எரித்து கொன்ற மாஜி போலீஸ்காரர் கைது

வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வட்டமலைக்கரை அணை பகுதியில் கடந்த 5ம் தேதி கை, கால்களும், உடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், தலையில் ரத்தக்காயங்களுடன் பெண் இறந்து கிடந்தார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து இரண்டு தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.

சம்பவ இடத்தில் மதுபாட்டில் மற்றும் உணவு பண்டங்கள் கிடந்தன.

இதனால், அந்த பெண்ணிற்கு தெரிந்த நபர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியிலிருந்து 4 கி.மீ சுற்றளவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரு நபர் சந்தேகப்படும்படி நடமாடியது பதிவாகி இருந்தது. விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியை சேர்ந்த சங்கர் (55) என தெரியவந்தது.

தனிப்படை போலீசார் பழனிக்கு விரைந்து சென்று சங்கரை கைது செய்தனர். விசாரணையில் சங்கர் 1998ல் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தற்போது ஏலக்காய் வியாபாரமும், தனியார் நிறுவனங்களில் காவலாளியாகவும் பணிபுரிந்துள்ளார். கொலையான பெண் பழனி தாலுகா, பெரியகளய முத்தூர் பகுதியை சேர்ந்த துரை மனைவி வடிவுக்கரசி (45) என்பதும் இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், சங்கர் அரசு வேலை வாங்கி தருவதாக வடிவுக்கரசியிடம் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி அவர் தெரிந்தவர்களிடம் ரூ.10 லட்சம் பெற்று கொடுத்துள்ளார். ஆனால், அரசு வேலை ஏதும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. கொடுத்த பணத்தை வடிவுக்கரசி திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த சங்கர், வடிவுக்கரசியை கோயிலுக்கு செல்லலாம் என வரவழைத்துள்ளார். இதை நம்பி வந்த வடிவுக்கரசியை பைக்கில் ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைகரை ஓடை அணை பகுதிக்கு அழைத்து சென்று கல்லை எடுத்து தலையில் தாக்கி உள்ளார்.இதில், ரத்தக்காயமடைந்த வடிவுக்கரசி மயங்கி கீழே விழுந்தார். அதன்பின், தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளக்கோவில் போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.