‘‘மாஜி போலீஸ்காரரின் கொந்தளிப்பை மேடையில் கேட்டு, இனி மலராத கட்சியோடு கூட்டணி வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துட்டாங்களாமே இலைக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரரை பார்த்து, மலராத கட்சியின் மாஜி போலீஸ் அதிகாரி, ரொம்பவே கடுமையா பேசிட்டாராம்.. கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர், அவர் ஒரு தற்குறி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, நரம்பு புடைக்க உணர்ச்சி பிழம்பா பேசி கைதட்டலை வாங்கினாராம்.. இதுக்கெல்லாம் ஒரு பின்பக்க கதை இருப்பதா இலைக்கட்சிக்காரங்க சொல்றாங்க.. திடீரென கட்சிக்கு வந்த மாஜி கர்நாடக மாஜி போலீஸ்காரருக்கு, எப்படியாவது முதல்வராகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்துச்சாம்.. அதுவும் தன்னோட தலைமையை ஏற்றுக்கொண்டு, தேர்தலை சந்திக்கணும் என்பதுதான் அவரது திட்டமா இருந்திருக்கு.. டெல்லி மேலிடத்தில் தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக சொல்லி, அவர்களை நம்பவும் வைச்சிருக்காரு.. ஆனால் பழம் தின்னு கொட்டை போட்ட இலைக்கட்சி தலைவரோ, மாஜி போலீஸ்காரரை ஒரு பொருட்டாகவே மதிக்கலையாம்.. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான், என்னிடம் அதிகாரம் பண்ணுவதா என்ற கேள்விதான் முன்னே இருந்துச்சாம்.. அதுமட்டுமில்லாம, ரெண்டு பேருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், யார் பெரியவர் என்ற எண்ணமும் மேலோங்கி இருந்துச்சாம்.. இதனை நன்கு உணர்ந்து கொண்ட இலைக்கட்சி தலைவர், கூட்டணியில் இருந்தால் தானே பேசுவாய் என கூறி, உடைச்சிக்கிட்டு வெளியே வந்துட்டாராம்.. இதனால் உடைந்து போனது மாஜி போலீஸ்காரரின் இதயமாம்.. எப்படியாவது தேர்தலில் முப்பது இடத்தை பிடித்துவிடுவோம்னு டெல்லி மேலிடத்தில் சத்தியம் செஞ்சது நடக்காமல் போனதோடு மட்டுல்லாமல், ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் போனதால் டெல்லி தலைகளின் முகத்தில் முழிக்க முடியாமல் போனதாம்.. இதற்கு காரணமான இலைக்கட்சி தலைவரை விடப்போவது இல்லை என்ற கோபத்தில் தான், அவருக்கு கொலைகாரன் பட்டம் சூட்டுகிறார் என இலைக்கட்சி தொண்டர்கள் அடிச்சி சொல்றாங்க.. அதோட மட்டுமல்லாமல், நண்பர்கள் கொடுக்கும் பணத்தில் வீட்டுவாடகை கொடுக்கும் மாஜி போலீஸ்காரர், நேர்மையை பத்தி சொல்வது வேடிக்கையா இருக்கு.. அவர் மேடையில் பேசியதை கேட்ட இலைக்கட்சியின் ரெண்டாங்கட்ட தலைவர்கள் மலராத கட்சியோட கூட்டணி வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்காங்களாம். எதிர்காலத்திலாவது கூட்டணி அமையும் என நம்பியிருந்தவர்கள் எல்லாம் மலையின் பேச்சால், இனி அவ்ளோதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தலைமையிடம் நல்லபெயர் எடுக்க கட்சி குறித்த துண்டுபிரசுரம் வெளியிடும் நிகழ்ச்சியை கூட ரகசியமா நடத்தினாராமே வைத்தியானவர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ கட்சி குறித்த துண்டு பிரசுரங்களை வெளியிடும் நிகழ்ச்சியை திடீரென நடத்தினாராம்.. இந்நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே கலந்துகொண்டாங்களாம்.. இதற்கு முக்கிய காரணம், மாஜி அமைச்சர் ஒருவர் தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணியில் இணைந்ததுதானாம்… ‘மணியானவருக்கு’ கொடுத்த ஆதரவை மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு, தேனிக்காரர் அணியில் இருந்து வந்த மாஜி அமைச்சருக்கு தங்களது ஆதரவை கட்சி நிர்வாகிகள் கொடுத்து வருகின்றனராம்.. இதனால் அப்செட்டில் இருந்து வரும் ‘மணியானவர்’ துண்டு பிரசுரம் வெளியிடும் நிகழ்ச்சியை கூட முன்னதாக தெரிவித்தால் தேனிக்காரர் ஆதரவாளராக இருந்து வந்த மாஜி அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து விடுவாங்க.. இதனால் தலைமையிடத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்து விடும். நம்ம பெயரை தக்க வைத்துக்கொள்ள முடியாதுனு நினைத்த ‘மணியானவர்’ இந்த நிகழ்ச்சியை முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென ரகசியமா நடத்தி காட்டியுள்ளதா கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியின் மலையான தலைவருக்கு எதிர்ப்பு கிளம்பி இலைக்கட்சியினர் உருவ பொம்மை எரிக்க தொடங்கிட்டாங்களே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேசிய கட்சியின் மலையான மாநில தலைவர் அவர் பொறுப்பேற்றதில் இருந்தே இலை கட்சியை அவ்வப்போது சீண்டி வந்தாரு.. அவரது பேச்சு உச்சகட்டத்தை தொட இலை கட்சியின் கூட்டணியே டமால் ஆயிட்டு.. மக்களவை தேர்தல் வந்ததால் சிறிது காலம் இரு கட்சிகளின் தலைவர்களும் அமைதி காத்தாங்க.. இந்நிலையில் தேசிய கட்சிக்கு மத்தியில் ஆட்சியில் பெரும்பான்மை கிடைக்காமல் போனது.. எனினும் கூட்டணி கட்சிகளின் காலை பிடித்து ஆட்சி அமைத்துட்டாங்க… அது மட்டுமல்ல, இலை கட்சிக்கு தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காமலும் போனது. அல்வா உள்ளிட்ட சில தொகுதிகளில் தேசிய கட்சி இலை கட்சியை 3ம் இடத்திற்கும் தள்ளிவிட்டது.
இந்நிலையில் சமீப நாட்களாக தேசிய கட்சிக்கும், இலை கட்சிக்கும் முட்டல், மோதல் வெடித்துள்ளது. மலையான தலைவர் இலை கட்சியை அளவு கடந்து விமர்சிக்க, இதுவரை சேலம்காரர் மட்டுமே மலையான தலைவரை எதிர்த்து வந்த நிலையில், அல்வா, முத்து மாவட்டங்களில் மலையான தலைவரின் உருவபொம்மையை தீயிட்டு எரித்து இலை கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவிச்சிருக்காங்க.. ஒவ்வொரு பகுதியிலும் மலையான தலைவரின் உருவபொம்மையை எரிக்க தேசிய கட்சியினர் மவுனம் காத்து வர்றாங்களாம்.. இதனால் தேசிய கட்சிக்குள் மலையான தலைவருக்கு ஆதரவு இல்லையா அல்லது அடக்கி வாசிக்கின்றனரா என்ற கேள்வியும் எழுந்திருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.