மதுரை: மதுரையைச் சேர்ந்த மாஜி அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில் சுமார் ரூ.200 கோடி வரை கொள்ளை போனதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரை விளாங்குடி, மீனாட்சி நகர் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஜெயேந்திரன் கதிர்வேல் என்பவர் தனது வீட்டில் இருந்த ரூ.42 லட்சம் கொள்ளை போனதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், ‘‘சென்னை ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறேன்.
எனது ெசாந்த ஊரான போடியில் கோயில் திருவிழாவிற்காக கடந்த ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் சென்றேன். 21ம் தேதி வீடு திரும்பினேன். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள் சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.42 லட்சம் பணத்தை வைத்திருந்த பேக் மாயமாகி இருந்தது. வீட்டினுள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை’’ என கூறியிருந்தார். இதுகுறித்து மதுரை கூடல்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சிவப்பு பிரகாஷ் (35), நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த விவேக் ஆனந்த் (34), பொதும்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (49) மற்றும் திருப்பாலையைச் சேர்ந்த யோகேஷ் (36) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். புகார்தாரரான ஜெயேந்திரன் கதிர்வேல், மதுரையைச் சேர்ந்த மாஜி அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.