Thursday, June 20, 2024
Home » மாஜி உளறல் அமைச்சருக்கு அடுத்த முறை சீட் கொடுக்க வேண்டாம் என தலைமைக்கு இப்போதே புகார் போயிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மாஜி உளறல் அமைச்சருக்கு அடுத்த முறை சீட் கொடுக்க வேண்டாம் என தலைமைக்கு இப்போதே புகார் போயிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘கடைக்கோடியில் தொடங்கிய கதர் கட்சி ேஜாதி பயணம் தொடங்கிய இடத்திலேயே முடிந்து விட்டதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கதர் கட்சியை சேர்ந்த சிலர் கடைக்கோடி மாவட்டத்தில் கடைக்கோடி நகரில் இருந்து தலை நகருக்கு ஜோதி பயணம் ஒன்றை நடத்த முடிவு செய்தார்களாம். முன்னாள் பிரதமரின் நினைவிடத்தில் வரும் 21ம் தேதி வந்து சேரும் வகையில் பயணமும் திட்டமிடப்பட்டிருந்தாம். ஆனால், ஜோதி பயணத்திற்கு திரண்டவர்கள் தொடங்கிய இடத்திலேயே பயணத்தை திடீர்னு முடித்துவிட்டு திரும்பி சென்றுவிட்டார்களாம். அனுமதி பெறாமல் ஜோதி பயணத்தை நடத்தி செல்வது எப்படின்னு யோசித்தவர்கள் பயணத்தை தொடர்ந்து நடத்த விரும்பாமல் இந்த முடிவுக்கு வந்துட்டாங்களாம் என்கின்றனர் கதர்கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சாமியை கைக்குள் போட்டு அதிகாரிகளை ஆட்டிப்படைக்கும் பெண் உயரதிகாரி பற்றி சொல்லுங்க..’’ என அடுத்த கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி கல்வித்துறையின் நடவடிக்கை மோசமாகி விட்டதாக புகார்கள் குவிந்து வருகிறதாம்.. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசர அவசரமாக அமல்படுத்தியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை பெற்றோர் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனராம். அதிகாரிகள் இதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லையாம்.. பள்ளி கல்வித்துறை இணை இயக்குநராக உள்ள காமி, இயக்குநராக உள்ள தர்ஷினி கூட்டு முயற்சி இல்லாததுதான் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்தற்கு காரணம்னு சொல்றாங்க.. இயக்குநராக உள்ள தர்ஷினி, விரைவில் பதவி உயர்வு பெற்று ஐஏஎஸ் ஆக உள்ளாராம்.. இதனால் அவர், இத்துறையை கவனிக்காமல் இருக்கிறாராம்.. இணை இயக்குநராக உள்ள காமி பெண் அதிகாரியோ, பவர்புல் சாமியின் பினாமி போன்று செயல்படுகிறாராம்.. இதனால் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள், அலுவலர்களை ஆட்டிப்படைக்கிறாராம்.. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு இவரை மாற்ற வேண்டும்னு பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கு.. ஆனால் காமி பெண் அதிகாரியோ கண்டுகொள்ளவே இல்லையாம்.. சாமியின் பரிபூர்ண ஆசி பெற்றவள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்ன செய்தாலும் நடக்காதுனு தனது ஆதரவாளர் மத்தியில் ரொம்ப கூலாக கூறி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி உளறல் அமைச்சருக்கு அடுத்த முறை சீட் கொடுக்க வேண்டாம் என தலைமைக்கு இப்போதே புகார் போயிட்டு இருக்கிறதாமே…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவாக இலைக்கட்சியைச் சேர்ந்த மாஜி உளறல் அமைச்சர் உள்ளார். கடந்த தேர்தலில் இவர் ஜெயிப்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தொகுதியில் தீவிரமாக ரவுண்டு வந்து, ‘மீண்டும் மக்கள் கடமையாற்ற வேண்டும். வாய்ப்பு தாருங்கள். தொகுதியை டாப் ஆக மாற்றிக் காட்டுகிறேன்’ என்றார். மக்களும் நம்பி வாக்களித்தனர். ஆனால், இவர் பேர் சொல்லும் அளவுக்கு எந்த திட்ட பணிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்ற குரலே தொகுதி முழுக்க ஓங்கி ஓலிக்கிறதாம்.. மக்களை எட்டிப் பார்க்காமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறாராம் மாஜி உளறல் அமைச்சர்.. தேர்தல் வந்தால் மட்டும் தொகுதிக்குள் வந்து தலைகாட்டுவார்போல.. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக வேறு வழியின்றி தொகுதி பக்கம் எட்டி பார்த்தாராம்.. அதிலும், சில ஏரியாக்களில் எதிர்ப்பு பலமாக இருந்ததால், வேறு காரணம் சொல்லி எஸ்கேப் ஆகி விட்டாராம்.. தொகுதி நிதியில் இருந்து ஒரு பயணிகள் நிழற்குடையோ அல்லது குடிநீர் தொட்டியோ கூட இதுவரை அவர் கட்டிக் கொடுக்கவில்லையாம்.. அடுத்து சட்டமன்ற தேர்தல் வந்தால், எதைச் சொல்லி ஓட்டு கேட்பது, இதே நிலை நீடித்தால் ஏற்கனவே பூட்டு மாவட்டத்தில் இலைக்கட்சி பலமிழந்து வருகிறது. இப்படியிருந்தால் கஷ்டம்.. அடுத்த முறை இவருக்கு சீட் தர வேண்டாமென்று இப்போதே தலைமை வசம் சிலர் புகார் கூறத் தொடங்கி விட்டனராம்… அடுத்த வாய்ப்பு நமக்குத்தான் என இப்போதே சிலர், துண்டுபோட்டு காத்திருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தலைமையுடன் கருத்துவேறுபாடால் திடீரென மாஜி அமைச்சர் சைலண்டாகி விட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் தொகுதியில் இலைக்கட்சி சார்பில் மாஜி அமைச்சர் தனக்கு வேண்டிய இரண்டு வார்த்தையில் பெயர் உள்ள நபரை வேட்பாளராக களத்தில் இறக்கினாரு.. தேர்தலில் தனது ஆதரவாளரை வெற்றி பெற வைப்பதற்காக கட்சியில் உள்ள நிர்வாகிகள் யாரையும் நம்பாமல் இறுதிக்கட்ட பிரசார வரையிலும் தனது ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கி வேலை செய்தாரு.. ஆனால் தேர்தலுக்கு பின்னர் அவரு திடீரென சைலண்டா இருக்கிறாராம்..
கட்சியில் உள்ள நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தனது ஆதரவாளர்களுடன் பேசுவதை கூட தவிர்த்து விட்டாராம்.. இதற்கான காரணத்தை கண்டறிய மாஜி அமைச்சரின் விசுவாசிகளிடம் நிர்வாகிகள் விசாரிச்சிருக்காங்க.. வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் எல்லாம் ஆரம்பம் முதல் இறுதிக்கட்ட பிரசார வரையிலும் எதிர்பார்த்த அளவுக்கு வேட்பாளருக்கோ, மாஜி அமைச்சருக்கோ வரவேற்பு இல்லையாம்… இதனால் தனது ஆதரவாளரான வேட்பாளருக்கு டெபாசிட் கூட கிடைக்காதுன்னு ரிசல்ட்டுக்கு முன்னதாகவே மாஜி அமைச்சர் கணித்துள்ளாராம்.. ரிசல்ட்டுக்கு பின்னர் சேலம்காரரை எப்படி நேரில் சந்திப்பதுனு கடும் அப்செட்டில் இருந்துருக்கிறாரு.. இந்த தகவல் தெரிய வரவே மாஜி அமைச்சருக்கு தலைமையிடம் பயங்கர டோஸ் விட்டுள்ளதாம். அப்புறம்தான் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுதான் மாஜி அமைச்சரின் சைலண்ட்டுக்கு காரணம்னு நிர்வாகிகளுக்கு தெரிய வந்ததாம்… தேர்தலுக்கு பின்னர் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் இலை கட்சிக்குள்ளே இந்த டாப்பிக் பற்றி தான் ஒரே பேச்சா இருக்காம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.
‘‘பெண் ஐபிஎஸ் அதிகாரியின் அதிரடியால் வதந்தியை பரப்பி வர்றாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாம்பழ ஊரில், பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆணையரா உள்ளாராம். இவர் வந்த பிறகு போலி லாட்டரி, சந்துக்கடை ஆகியவற்றை காலி செய்து விட்டாராம். ரவுடிகளை ஒழிப்பதிலும் முன்னுரிமை கொடுக்கிறாராம். இதனால பாதிக்கப்பட்டவங்க, சேலத்தில் கருப்பு கோட் போட்டவர் தலையீடுன்னு சொல்லி தகவல் பரப்புறாங்களாம். இதனால, இது குறித்து வெளியான தகவல்களை அந்த மாநகர போலீசார் மறுக்கிறாங்களாம். அதுபோன்ற புகார்கள் எதுவும் கமிஷனரின் கவனத்துக்கு வரலையாம். எந்த தகவல் என்றாலும் நேரடியாக ஆணையரின் கவனத்துக்கு கொண்டு வந்தால், நடவடிக்கை பாயும் என்கின்றனர் மாநகர போலீசார்’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

14 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi