சிவகாசி:விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிந்துரையின் பேரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி மாற்றம் செய்துள்ளார். அதன்படி வில்லிபுத்தூர் நகரச் செயலாளர் பதவியில் இருந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நகரச் செயலாளராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுவர்மனுக்கு மாவட்ட அளவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு தெற்கு புதிய ஒன்றிய செயலாளராக கோட்டையூர் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து வி.எஸ்.பலராம் நீக்கப்பட்டு, இவருக்கு பதிலாக மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகிகளின் மாற்றத்தால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.