சென்னை: மோசடி வழக்கில் கைதாகியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் எஸ்பிஎஸ்.ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரும், அவரது மனைவியும் இணைந்து மருந்து விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராஜாவின் உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில், தனது சகோதரர் ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா நடத்தி வரும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதில் 16 சதவீதம் பங்குகளை தருவதாகவும், இதன் மூலம் பெரியளவில் லாபம் கிடைக்கும் என்று கூறியும் ரூ.17 கோடி வரை தன்னிடம் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை அறிந்த ராஜா மலேசியா தப்ப முயன்ற நிலையில் போலீசார் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் ராஜாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் எஸ்பிஎஸ்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது மனைவி அனுஷா தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகநாதன் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எஸ்.பி.எஸ்.ராஜாவை கட்சிப் பதவியில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதில், ‘‘கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராகவும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும் தூத்துக்குடி தெற்கு பகுதி அதிமுக செயலாளர் எஸ்பிஎஸ்.ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்’’ என கூறியுள்ளார்.