‘‘மாங்கனி கட்சிக்குள் நடக்கும் மோதலுக்கு மலராத கட்சிதான் காரணம் என்றாலும், அது உட்கட்சி விவகாரம் எனக்கூறி அல்வா ஊர் எம்எல்ஏ நழுவி விட்டாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கட்சியில் தந்தை – மகன் இடையே நடந்து வரும் மோதல் போக்குக்கு மலராத கட்சிதான் காரணம் என்பதை தந்தை போட்டு உடைத்து விட்டாராம்.. மலராத தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம்னு மகனிடம் சொன்னேன். ஆனால், மகனும், மருமகளும் காலை பிடித்தார்கள். அதனால்தான் கூட்டணியே வைத்தோம் என தந்தை தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டார்.
எப்படியோ மாங்கனி கட்சியில் நடந்து வரும் இந்த பெரும் குழப்பங்களுக்கு மலராத கட்சிதான் காரணம் என்பதையும் தந்தை கூறி விட்டார். ஆனால், மலராத கட்சியின் எம்எல்ஏவான அல்வா ஊர்க்காரர், தந்தை – மகன் இடையே நடந்து வரும் மோதலுக்கு தங்கள் கட்சி காரணம் இல்லை எனக் கூறி நழுவிக் கொண்டாராம்.. அது அவர்களது உட்கட்சி விவகாரம் என எல்லோரும் போல பதில் சொல்லி இருக்கிறார். பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிய கதையாக இருக்கிறதே என கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வாங்க.. அந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ அல்வா ஊர் எம்எல்ஏக்குத்தான் ஏகப் பொருத்தம் என கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டாலர் சிட்டியில் போட்டியிட காய்களை நகர்த்தும் இலைக்கட்சி மாஜி அமைச்சருக்கு எதிராக புகார்களை தட்டிவிடும் எதிர்க்கோஷ்டியினர், மீறி சீட் வாங்கினால் சரியான பாடம் புகட்டவும் தயாராகி வர்றாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சியோடு இலைக்கட்சி கூட்டணி அறிவித்ததால் ஏற்கனவே இலைக்கட்சியில் அதிருப்தி நிலவுகிற சூழலில் கடந்த முறை டாலர் சிட்டி புறநகரில் போட்டியிட்டு ஜெயிச்ச மூன்று இன்சியல் கொண்ட இலைக்கட்சி மாஜி அமைச்சர் இந்த முறை சிட்டியில் போட்டியிட காய்களை தீவிரமாக நகர்த்திக்கிட்டு இருக்கிறாராம்..
டாலர் சிட்டியின் வடக்கு அல்லது தெற்கு தொகுதிகள் தனக்கு சாதகமாக இருக்கும்னு மாஜி அமைச்சர் உறுதியாக நம்புகிறாராம்.. வடக்கு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் பதவியும் கிடைத்ததாம்.. எனவே இந்த முறையும் சென்ட்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுங்கிற நம்பிக்கையில இருக்கிறாராம்.. ஒருவேளை வடக்கு கிடைக்காவிட்டால் தெற்கு தொகுதியை கட்டாயம் கைப்பற்றியே ஆகணும்னு இருக்கிறாராம்.. இதை மனதில் வைத்து சிட்டிக்குள் இருக்கிற தொகுதிகளில் பூத் கமிட்டி மீட்டிங், ஆதரவாளர்களை சந்திப்பது என சகல வேலைகளையும் மாஜி செய்துகிட்டு வருகிறாராம்..
ஆனா தற்போதைய வடக்கு சிட்டிங் எம்எல்ஏவும், ஏற்கனவே தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த குணமானவரும் தொகுதியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லையாம்.. தேவையில்லாம மாஜி அமைச்சர் தங்களோட தொகுதிக்குள் மூக்கை நுழைக்கிறார்ன்னு மா.செ.வான தென்னைக்கு புகழ்பெற்ற ஊர்க்காரரிடம் புகார் செய்தார்களாம்.. இப்படி டாலர் சிட்டி இலைக்கட்சியில கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுதாம்.. ஒரு வேளை மாஜி அமைச்சர் தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி தெற்கு அல்லது வடக்கு ஏதாவது ஒன்றில் போட்டியிட சீட் வாங்கினால் தேர்தலில் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்று நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நலத்திட்ட உதவி வழங்குவதில் கொடி பிடிக்கிறவங்களுக்கு கேரியர் டப்பா, ஒண்ணுமே செய்யாதவங்களுக்கு ஆடு, மாடு கொடுத்து அதிருப்திய சம்பாதிச்சிட்டாராமே இலைக்கட்சி தலைவர் என்றார் பீட்டர் மாமா. ‘‘மலையடிவார மாவட்டத்தில சிறிய சேலம் இருக்க.. இங்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இலைகட்சி தரப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்திருக்கு.. கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையின்பேரில் ஆடு, மாடு, லேப்டாப் என விலை உயர்ந்த பொருட்கள் இலைக்கட்சி தலைவரால் வழங்கப்பட்டதாம்..
இதனால அதிருப்தியடைந்த அடிமட்ட கட்சிக்காரர்கள் கொடி புடிக்கிற நமக்கு கேரியர் டப்பா, ஒண்ணுமே செய்யாதவர்களுக்கு ஆடு, மாடுகளா என புலம்பினார்களாம்.. வரும் தேர்தலில் ஆடு, மாடு வாங்கினவங்களே இனி உங்களுக்கு ஓட்டு போடுவாங்கன்னு தங்களது விரக்தியை உள்ளூர் நிர்வாகிகளிடம் கொட்டி தீர்த்தார்களாம்.. அதோட இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டுமென சேலத்துக்காரர் பேசியபோது, ஊர்ந்து சென்று பதவிக்கு வந்த இவர் இப்படி பேசலாமான்னு கிசுகிசுத்தபடி வெளியேறினார்களாம். இதுபற்றிதான் சிறிய சேலத்தில் பரவலாக பேச்சு ஓடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி போலீஸ்காரர் ஆதரவாளர்களை களையெடுப்பதற்கான பணி தீவிரமாக நடப்பதால் தூக்கத்தை தொலைத்த தூங்கா நகர மலராத கட்சி நிர்வாகிகள் இருக்கும் இடம் தெரியாமல் பதுங்கி கொண்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மாநில தலைவராக மாஜி போலீஸ்காரர் இருந்தபோது, தூங்காநகர கட்சியினர் எப்போதும் கட்சிப்பணியில் ரொம்ப பிஸியாக இருப்பதைப் போலவே ஆக்டிங் தருவது வழக்கம். இதை உண்மையென நம்பி புறநகரைச் சேர்ந்த நிர்வாகியை, மாஜி போலீஸ்காரர் மாநகர நிர்வாக பொறுப்புக்கு கொண்டு வந்தாராம்..
மேலும், தூங்காநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் மாஜி போலீஸ்காரரின் தீவிர ஆதரவாளர்களே நிர்வாகிகளாக இருந்தாங்க.. இந்த சூழலில் மாஜி போலீஸ்காரரின் பதவி பறிபோவதற்கு முன்பு, தூங்காநகர மாவட்ட நிர்வாகி அதிரடியாக மாற்றப்பட்டார். புதிய நிர்வாகியாக பேரரசரானவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முக்கிய பொறுப்புகளில் உள்ள மாஜி போலீஸ்காரரின் ஆதரவாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறதாம்.. விரைவில் மாவட்டத்தில் களையெடுப்பு தீவிரமாக இருக்குமென பரபரப்பாக பேசப்படுகிறது.
இதனால் தூங்காநகரில் உள்ள மலராத கட்சி நிர்வாகிகள் பலர், சைலண்ட் மோடுக்கு சென்று விட்டனராம்.. எப்ப கூப்பிட்டாலும் செல்போன் சுவிட்ச் ஆப் தகவல்தான் வருகிறதாம்.. மாவட்டத்தில் அப்பப்ப போஸ்டர்களை ஒட்டி, தங்களது படத்தை பெரியதாக போட்டு, போஸ்டர்கள் ஒட்டும் கலாச்சாரமும் இக்கட்சியில் கடந்த 2 மாதங்களாக இல்லையாம்.. எப்படியும், நம்மளை போஸ்ட்ல இருந்து தூக்கிவிடுவர் என்ற நினைப்பில் பலரும் இருக்கும் இடம் தெரியாமல் பதுங்கிக் கொண்டதாக கட்சியினரே வெளிப்படையாக பேசிக்கிட்டு திரியுறாங்கப்பா..’’ என்று முடித்தார் என்றார் விக்கியானந்தா.