புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 34வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். டெல்லியின் வீர் பூமியில் உள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகின்றன. உங்கள் நிறைவேறாத கனவுகளை நனவாக்குவதே எனது லட்சியம். நான் அதை செய்வேன்’’ என கூறி உள்ளார்.
கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘ராஜீவ்காந்தி இந்தியாவின் சிறந்த மகன். லட்சக்கணக்கான இந்தியர்களிடையே நம்பிக்கையை ஊக்குவித்தவர். 21ம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவதில் ராஜீவ்காந்தியின் தொலைநோக்கு மற்றும் துணிச்சலான பார்வைகள் முக்கிய பங்கு வகித்தன’’ என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது பதிவில், ‘‘ராஜீவ்காந்தி தனது பதவிக் காலத்தில் நனவாக்க விரும்பிய அவரது கனவு இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பிப்போம். நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்காக அவர் செய்த உயர்ந்த தியாகத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். இந்தியாவை ஒற்றுமையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது நமது கடமை. எனவே ராஜீவ்காந்தியின் தியாகம் வீண் போகாது’’ என்றார்.