Monday, March 4, 2024
Home » மாஜி மந்திரியின் ரகசிய சந்திப்பால் அப்செட் ஆகியிருக்கும் சேலத்துக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மாஜி மந்திரியின் ரகசிய சந்திப்பால் அப்செட் ஆகியிருக்கும் சேலத்துக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Neethimaan


‘‘இ லைக்கட்சி தலைவருக்கு ‘எனிமா’ கொடுக்கும் ரெண்டாங்கட்ட மாஜிக்கள் பற்றி சொல்லுங்களேன்…’’ என்று ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் தலைவரை மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர் ஒரு பொருட்டாகவே மதிக்கலயாம். தான் சொல்வதைத்தான் கேட்கணுமுன்னு முரண்டுபிடிச்ச காரணத்தால இனிமேல் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாதுன்னு இலைக்கட்சி தலைவர் கூட்டணியில இருந்து வெளியே வந்துட்டார். கட்சிக்காரங்களும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பதாக சேலத்துத்தலைவர் கூறிக்கிட்டிருக்கார். ஆனா, இலைக்கட்சியின் ரெண்டாம்கட்ட தலைவர்களுக்கு இந்தபிரிவுல துளிக்கூட விருப்பம் இல்லையாம். ஏன்னா.. ஐந்துக்கும் மேற்பட்ட மாஜிக்களின் ஊழல் வழக்குகள் தலைக்கு மேல் தொங்கும் கத்தியா இருக்காம். இதனால தலைவரின் முடிவுக்கு உடன்படாமல் இருக்காங்களாம்.

இதற்கு எடுத்துக்காட்டாக சம்பவம் ஒன்று நடந்ததா இலைக்கட்சியின் அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க. இலைக்கட்சியை இறுக பிடிச்சிக்க என்று மலராத கட்சியின் மாஜி தலைவர் கொங்கு நகரில் பெண் தலைவரை பார்த்து சொன்னாரு.. அவரு இப்போது வடமாநிலத்துல முக்கிய பொறுப்புல இருக்காராம். கூட்டணியை எப்படியும் பெவிக்கால் போட்டு ஒட்ட வச்சிரணுமுன்னு தீவிரமா இருக்காராம். கடந்த வாரம் மாங்கனி மாநகருக்கு வந்திருக்காரு. அவரை போய் இலைக்கட்சி தலைவருக்கு எல்லாமுமாய் இருக்கும் முட்டை மாவட்டத்து மாஜி போய் சந்திச்சி ஒருமணி நேரம் ரகசியமாக பேசியிருக்காரு. இதை தெரிஞ்சிக்கிட்ட இலைக்கட்சி தலைவர் ரொம்பவே அப்செட்டாகிட்டாராம். தாய் பகை குட்டி உறவாங்குற கதையா இருக்கேன்னு நொந்துபோய் இருக்கும் நேரத்துல, கூட்டணியில இருந்து வெளியே வந்துட்டேன்னு சொல்லி நான் சிறுபான்மை மக்களை சந்திச்சி அவங்களை இழுத்துக்கிட்டிருக்கேன்.

இந்த நேரத்துல இப்படி பண்றாங்களேன்னு வெளியே சொல்ல முடியாத சோகத்துல இருக்காராம் இலைக்கட்சி தலைவர்’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி மேட்டரு இன்னும் இருக்கு போலயே…’’ என பீட்டர் மாமா இழுக்க, ‘‘ஏன் அவசரப்படுறீங்க… சொல்றேன்… வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடியில உள்ள வண்டுல தொடங்கி தாங்கல்னு முடியுற ஊர்ல ஏரி இருக்குது. இந்த ஏரியில சீமை கருவேல மரங்கள் முளைச்சு புதர் மண்டி கிடக்குது. அதோடு ஏரியை சுற்றிலும் கடந்த இலைக்கட்சி ஆட்சிக்காலத்துல ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் முளைத்துவிட்டது. இப்படியே போனா பெரிய பரப்பளவுல இருக்குற ஏரி குட்டையா மாறிடும்னு அப்பகுதி மக்கள் புலம்புறாங்க.
மேலும், கடந்த 4 வருஷத்துக்கு முன்னால ஏரியின் மையப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது. அங்கிருந்த களிமண் வாகனங்களில் அள்ளி செல்லப்பட்டது.

பல ஆண்டுகளாக தூர் வாரப்படாம தூர்ந்து போன ஏரியை சீரமைக்குறதா மக்கள் நினைச்சாங்க. ஆனா, கதை வேற மாதிரி ஆகிடுச்சு. மரங்கள வெட்டிய பகுதியில சிலர் பன்றி பண்ணை வச்சிட்டாங்க. இந்த பண்ணையை அப்புறப்படுத்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கலையாம். இதனால பண்ணை வச்சவங்ககிட்ட சிலர் மிரட்டி மாமூல் வசூலிச்சுட்டு இருக்காங்களாம். அதோடு களிமண் அள்ளியவங்க இலைக்கட்சியை சேர்ந்தவங்கன்னும், அனுமதியில்லாம கடத்திட்டு போனதாகவும் பரபரப்பா பேசப்படுது. அதோட அருகே ெசங்கல்சூளை நடத்துறதாகவும் சொல்றாங்க. இப்போ கட்டிட கழிவுகள், மக்காத பிளாஸ்டிக் குப்பைங்கன்னு கொட்டி ஏரியில இருக்குற பள்ளங்களை மூட தொடங்கி இருக்காங்களாம். இதுனால ஏரியை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதியில நிலத்தடி நீர் விஷமாகும் அபாயம் ஏற்பட்டிருச்சி. இதுதொடர்பா அதிகாரிங்க முழுமையா விசாரிச்சு உடனே நடவடிக்கை எடுக்கணும்னு குரல் ஒலிக்க தொடங்கி இருக்குது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அது வேறயா? நான் கேட்டது… இலை கட்சியுடன் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அல்வா ஊரின் எம்எல்ஏ ஒரு புது விளக்கம் அளித்துள்ளாரே… அதை சொல்லுங்க’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதுவா… இலை கட்சியில மம்மி மறைவுக்கு பிறகு தேசிய கட்சியும், இலை கட்சியும் ஒன்றாக பயணிச்சுது. தேசிய கட்சிக்கு தமிழ்நாட்டில் வலுவான அடித்தளம் இல்லாத போதிலும் இலை கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் கடந்த சட்டசபை தேர்தலில் 4 தொகுதி கிடைத்தது. அதில் அல்வா ஊரின் எம்எல்ஏவும் ஒருவர். அவர் இலை கட்சியில் இருந்து தான் தேசிய கட்சிக்கு தாவினாரு. அவர் இலை கட்சியில் இருந்த போது வெற்றி பெற்ற தொகுதியையே கேட்டுப் பெற்று தேசிய கட்சியின் எம்எல்ஏ ஆயிருக்காரு. முதுகில் சவாரி செய்தாலும் தொடர்ந்து தேசிய கட்சியை விமர்சனம் செய்ததோடு, எங்க தலைமையிலதான் கூட்டணின்னு பேசியதால கூட்டணி அம்பேலாச்சு.

அவங்க இல்லாம எப்படி தேர்தலை சந்திப்பதுன்னு தேசிய கட்சியினர் கையை பிசைகின்றனர். இதுபற்றித்தான் அல்வா எம்எல்ஏ, நாங்க அவங்களை அழைத்துப் பேசனும்கிறதுக்காகத்தான் முறிச்சிட்டிருக்காங்க. அவங்கள அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பாராளுமன்ற தேர்தல் குழு முடிவு செய்யும்னு புது விளக்கம் தந்துள்ளார். இவங்க பிரிவுல்லாம் நாடகம்தான்னு எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிற நிலையில அல்வாக்காரரு சொன்னது அதுக்கு வலு சேத்திருக்குத்தானே’’ என்று திருப்பி கேட்டார் விக்கியானந்தா. ‘‘வேற என்ன விஷயம் இருக்கு?’’ ‘‘கடலோர மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துவதும், இலங்கையில் இருந்து கடலோர மாவட்டத்திற்கு தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்துவதும் வாடிக்கையாக நடந்து வருவது உண்டு.

இதனால் கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறையினர், மாவட்டத்தின் தீவு கடல் பகுதியின் முக்கிய ஊர்களை மட்டுமே குறி வைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுதாரித்துக் கொண்ட கடத்தல்காரர்கள் மாவட்டத்தின் மற்ற கடலோர ஊர்கள் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை, கடத்தல் பொருட்களை கடத்த ஆரம்பித்திருக்கிறார்களாம். இதில் சிறுவர்கள், பெண்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தி வருவதாகவும், கடத்தல்காரர்கள் வழக்கமான பயணிகளை போன்று வெளியூர் பஸ்களில் ஏறிச் சென்று உரியவர்களிடம் பொருட்களை ஒப்படைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பேரில் குறிப்பிட்ட கடற்கரையோர கிராமப்பகுதிகளை கணக்கெடுத்துள்ளனர். விரைவில் இங்கெல்லாம் அதிரடி ரோந்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்குமென்கின்றனர்….’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

18 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi