‘‘புல்லட்சாமியை ரகசியமாக கண்காணிக்கிறார்களாமே..என்னா விஷயம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்குபின் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணிக்குள் புகைச்சல் நீடித்துவரும் நிலையில், சட்டசபையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. பாஜ அதிருப்தி உறுப்பினர்கள் தனி குழுவாக செயல்பட்ட நிலையிலும் எந்தவித டென்ஷனும் இல்லாமல் கூலாக சட்டசபை கூட்டத்தில் புல்லட்சாமி பங்கேற்றிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே மாஜி முதல்வரான மற்றொரு சாமியானவர், பாஜ கூட்டணியில் ரங்கசாமி நீடிக்க மாட்டார் என சமீபத்தில் மார்தட்டியிருந்தார். புல்லட்சாமி கூட்டணி மாற திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய ஆளும் பாஜ தரப்புக்கு ரகசிய தகவல் கசியவே, அங்கிருந்து பறந்துவந்த 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, ரகசியமாக புல்லட்சாமியை சந்தித்து பேசிவிட்டு சென்றார்களாம். அதன்பிறகு புல்லட்சாமி தரப்பு சைலண்ட் மோடுக்கு திரும்பிவிட்ட நிலையில், டெல்லியில் இருந்து வந்த குழு அன்புகரம் நீட்டியதா, மீசையை முறுக்கிவிட்டு சென்றதா என்ற சலசலப்பு ஆளுங்கட்சி வட்டாரத்தில் உலாவுகிறது.
எதிர்அணிக்கு புல்லட்சாமி தாவி விடக்கூடாது என்பதை தடுக்கும் வகையில் புல்லட்சாமியை சந்திக்கும் அரசியல் விஐபிக்கள் நகர்வையும் உளவுத்துறை மூலம் கண்காணித்து வருகிறதாம் ஒன்றிய தரப்பு. இதுதான் தற்போதைய புதுச்சேரி அரசியல் ஹைலெட் என்கிறார் விக்கியானந்தா. ‘‘சாலை அதிகாரி நடத்தும் வசூல் வேட்ைட பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னான ஆறு கொண்ட ஊர் பக்கத்துல இருக்குற உட்கோட்டத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலைத்துறையில சாலை அதிகாரியாக இருக்குறாராம் ஒருத்தரு.
இவரு பொன்னான ஆறு பகுதியில இருந்து குயின்பேட்டை மாவட்டம் சோ என்று தொடங்கி லிங்கர் என்று முடியுற பகுதி வரைக்கும் சாலைய விரிவாக்கம் செய்ற பணி நடக்குதுன்னு, புரளியை கிளப்பிட்டு சாலை ஓரம் இருக்குற கடைகள், வீடுகள்னு எல்லாம் ஆக்கிரமிப்புல இருக்குதுன்னு ெசால்லி தனியாக வசூல் வேட்டை நடத்துறாராம். அதுமட்டுமில்லாம, இந்த 2 ஊருக்கு இடைப்பட்ட பகுதியில குடிநீர் பைப்லைன் புதைக்கிற வேலை நடக்குதாம். இதுல புதிய பைப் அமைக்கும்போது, அங்க இருக்குற பழைய பைப்களை இவரே சேல்ஸ் செஞ்சி காசு பார்க்குறாராம்.
இதை யாராவது தட்டி கேட்டா, அவங்களை இவரு தட்டிகேட்குறாராம். இதனால துறை சார்ந்த அதிகாரிங்க களத்துல ஆய்வு செஞ்சி, நடவடிக்கை எடுக்க வேண்டும்னு புகார் குரல் ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தன்னை திட்டிய மாஜியை கட்சி கண்டுகொள்ளவில்லை என கடுப்பில் இருக்கிறாராமே தாமரை தலைவர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்து இலைக்கட்சியின் மாஜியான தெர்மகோல் கடந்த வாரம் பேட்டி அளித்தபோது, தாமரைக் கட்சி மாநிலத்தலைவரை, ஒருமையில் வாங்கு வாங்கென வாங்கி தள்ளி விட்டார்.
இதற்கு தாமரைக்கட்சியினர் கொதித்தெழுவார்கள் என்று பார்த்தால், கொதித்த பாலில் தண்ணீர் தெளித்ததைப்போல் ‘புஸ்’ எனப் போய் விட்டது. ‘மெடல்’ மாவட்டத்தில் கூட ஒரு சிலர் காவல்நிலையத்தில், இலைக்கட்சியின் மாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக் கொடுத்தும், தூங்கா நகரத்து தாமரை மாவட்ட தலைமை பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம். தூங்கா நகரத்து தாமரைக் கட்சியின் மாவட்டத் தலைமைக்கு, மாநிலத்தலைமை மீது அவ்வளவாக பிடிமானம் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாம்.
பதவியை விட்டு தூக்குவதாக தான் அறிவித்திருந்த தூங்கா நகரத்தின் மாவட்டத் துணைத்தலைமை, அடுத்த நாளே காவல்நிலையத்தில் தெர்மகோல் மீது ஒரு புகார் மனு தந்து முந்திக் கொண்டதால், இந்த விஷயத்தை இனி கையில் எடுத்து போராடினாலும் அதற்கான பெயர் துணைத்தலைமையானவருக்கு சென்று சேர்ந்து விடும் எண்ணமும் மாவட்டத் தலைவரை தொடர்ந்து இயங்காமல் செய்து விட்டதாம். மாநிலத்தலைமையானவருக்கு இந்த சேதி சென்று சேர்ந்துள்ளதாம். ‘இவங்க ஊர்ல என்னை இப்படிப் பேசியும் எதிர்ப்பைக் காணாமே?’ என்று தூங்கா நகரத்து மாவட்ட நிர்வாகிகள் மீது மாநிலத்தலைவர் செம கடுப்பில் இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாறுதல் உத்தரவை காற்றில் பறக்க விட்டாங்களாமே காக்கிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்ட போலீசில் ஒரே ஸ்டேஷனில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றிய 330 போலீஸ்காரர்களை ஒரு மாதத்திற்கு முன்பு வெவ்வேறு ஸ்டேஷன்களுக்கு விருப்ப இடமாறுதல் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவு போட்டாராம். அந்த எஸ்பி, தற்போது இடமாறுதலாகி சென்ற நிலையில், அவர் போட்ட ஆர்டரை பின்பற்றாமல் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக இருக்கும் ஸ்டேஷனிலேயே 100க்கும் மேற்பட்ட காக்கிகள் இன்னும் இருக்காங்களாம்.
ஒரே இடத்தில் இருந்து கல்லா கட்டலாம் என்ற நோக்கத்தில் இருப்பதாக மற்ற காக்கிகள் புலம்பி தள்ளுறாங்களாம். ஆனால் அந்த இடமாறுதல் பெற்ற காக்கிகள், இன்ஸ்பெக்டர்கள் விடுவிக்காததால்தான், இங்கேயே இருக்கோமுனு சாக்குப்போக்கும் சொல்றாங்களாம். அதனால புதுசா வந்த எஸ்பி, ஏற்கனவே போடப்பட்ட உத்தரவை முதலில் பின்பற்றுங்கள் என கடுமையாக உத்தரவு போட்டால்தான், எல்லாம் சரியாகுமுனு மாங்கனி மாவட்ட காக்கிகள் மத்தியில் பேச்சா இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.