‘‘மும்மூர்த்திகள் கைகோர்ப்பால் முணுமுணுப்பில் இருக்காராமே புல்லட்சாமி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி ஆளுமையில் உள்ள 3 விஐபிக்கள் ஒன்றிய தரப்பின் அறிவுறுத்தலுக்கிணங்க இணக்கமான மனநிலைக்கு வந்துள்ளார்களாம். அதாவது நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து ரகசிய சர்வேயை முடித்த ஒன்றிய அதிகார தரப்பு, அதை மாற்றியமைத்து தங்களுக்கு மக்களிடம் நற்பெயர் ஏற்படுத்துவதற்கான வேலைகளை மறைமுகமாக தொடங்கி விட்டார்களாம்.
இதற்காக மக்கள் நீண்ட நாளாக விரும்பிய, நிறைவேறாமல் கிடப்பில் கிடந்த சில திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார்களாம். அதற்கேற்ப 3 அதிகார தரப்பும் தங்களது பணிகளை காய்நகர்த்தி வருகிறார்களாம். அரசுடன் இணக்கமான சூழல், கோப்புகளுக்கு அனுமதி, வேலை வாய்ப்புக்கு தீர்வு உள்ளிட்ட அதிரடிகளை செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம் புல்லட்சாமி.
மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள தனக்கு கிடைக்க வேண்டிய நற்பெயருக்கு சுணக்கம் ஏற்பட்டாலும் மண்ணின் மைந்தர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நல்லது நடந்தால் சரி… என்ற முணுமுணுப்பை நிர்வாகிகளிடம் புல்லட்சாமி கொட்டித் தீர்த்த நிலையில், அதையும் கண்டும் காணாமலும் அவரது கட்சியினர் உலாவுவதுதான் தற்போதைய புதுச்சேரி அரசியல் ஹைலெட்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி மந்திரிகளை கலங்கடித்துக் கொண்டிருக்கிறாராமே ஒரு டாக்டர்…’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. தமிழகத் தலைநகரத்தில் நடந்த கூட்டத்தில் தாமரைக்கட்சியின் மாநிலத்தலைவரானவர், சேலத்துக்காரரை விமர்சித்துப் பேசிய விவகாரத்தில், தமிழகத்தில் வேறெவரும் வெகுண்டெழும் முன்பு, தூங்கா நகரில் மருத்துவரானவர் முந்திக்கொண்டு காரசாரமாக மனு தயாரித்து கொண்டுபோய் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்து, சூடாக பேட்டியும் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தூங்கா நகரில் தெர்மாகோல், உதயம், செல்லம் என கட்சியின் மூத்த மூவர்கள் கோலோச்சியுள்ளனர்.
இவர்களெல்லாம் அறிக்கையும், பேட்டியும் அளித்துக் கொண்டிருந்த நேரத்தில், தாமரைக் கட்சியின் மாநிலத்தலைவரை கைது செய்யக் கோரிய மனுவுடன், தன்னோடு கட்சியின் மருத்துவக் குழுவினரை மட்டும் சேர்த்துக் கொண்டு போய் போலீஸ் கமிஷனரிடம் நேரில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மனுவைத் தந்தும், இனியும் தாமரைக்கட்சியினர் விமர்சனம் தொடர்ந்தால் ஊருக்கு ஊரு தாமரைக்கட்சியின் மாநிலத்தலைவரை முற்றுகையிடுவோம் என்ற எச்சரிக்கையோடு, பேச்சை தொடர்ந்தால் நாக்கு அழுகி விடும் எனச் சாபமும் தந்தார். இது மூத்த மூவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறதாம்.
கட்சித்தலைமை அனுமதியுடனேயே, மூத்த மூவரில் எவரிடமும் கருத்துக் கேட்காமலேயே மருத்துவரானவர் இந்த களம் கண்டாராம். தேர்தலில் போட்டியிட்டபோதே மாவட்ட தலைமைப் பதவியைத் தருவதாக வாக்களித்திருந்ததால், அதை எப்படியும் எட்டிப்பிடிக்கவே இப்போதெல்லாம் தலைமையுடன் நெருக்கம் காட்டி, காரியங்களில் மருத்துவரானவர் அதிரடி காட்டி வருகிறார் என்கின்றனர் விபரமறிந்த இலைக்கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பல்கலையில் என்ன பிரச்னையாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்த்தாய் வாழ்த்தை நமக்கு தந்தவரின் பெயரை கொண்ட தென்மாவட்ட பல்கலையில் ஆய்வு என்றாலே மாணவர்கள் அலறியடித்து ஓடுகின்றார்களாம். பி.எச்.டி பட்டப் படிப்பை மேற்கொள்ள தலைப்பை தேர்வு செய்து, வழிகாட்டியின் துணையோடு என்னதான் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தாலும், பல ஆய்வுகள் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறதாம். பல்கலைக்கழக ஆய்வுத் துறை அலுவலர்கள் இயக்குநர் பார்வையில் உள்ளது, தேர்வாணையருக்கு அனுப்பியுள்ளோம் என ஏதோ காரணம் சொல்லி காலம் கடத்தி விடுகிறார்களாம்.
சில கிராமப்புற மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பிவிட்டு மாதக்கணக்கில் நேர்முகத் தேர்வுக்கு வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றனர். வரும் ஆனா வராது…என்ற கதையாய், தங்களது முனைவர் பட்டம் கைக்கு கிட்டியும், வாய்க்கு கிட்டாமலே இருப்பதாக பல்கலைக்கே சென்று பல மாணவர்கள் புலம்பி வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சொந்த ஊரிலேயே இலைக்கட்சி தலைவரை ஏமாத்துறாங்களாமே.. என்ன மேட்டர்.. விரிவா சொல்லுங்க..’’ என்று ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரு சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் உற்சாக வரவேற்பு கொடுப்பாங்களாம். ஏர்போர்ட்டுக்கு கொஞ்ச பேர் செல்லும் நிலையில், நெடுஞ்சாலை நகர் வீட்டில் வரிசை கட்டி நின்று வணக்கம் போடுவாங்க. கொஞ்ச நாட்களுக்கு முன்பு நரம்பு புடைக்க கோஷம் எழுப்பி வரவேற்றாங்க. அதில் ஒரு நபர் மட்டுமே கோஷம் எழுப்பும் போது, பக்கவாத்திய கோஷம் இல்லாததால் அதுவும் நின்னுப்போச்சு.
இதனை வாடிக்கையா வச்சிருந்தாலும், தலைவரை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது எதிரணியில் இருப்போரை அழைத்து வந்து கட்சியில் இணைப்பாங்க. அதுவும் தேனீக்காரர் கோஷ்டியில் இருப்போரை இழுப்பதில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துவாங்க. அப்படித்தான் ரெண்டுநாளுக்கு முன்னாடி தேனிக்காரர் அணியை சேர்ந்த நூறுபேரை இலைக்கட்சி தலைவர் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துனாங்களாம். இதனை கேள்விப்பட்ட தேனிக்காரர் அணிக்காரர்கள் ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம். நம்மிடம் இருப்பதே ரெண்டு பேருதான. இதுல யாரெல்லாம் ஓடிப்போனாங்கன்னு உத்துப்பார்த்தால் ஜனவரி மாதமே இலைக்கட்சிக்கு ஓடிப்போனவங்கதான் மீண்டும் ஓடிப்போனதா படம் காட்டியிருக்காங்க.
இதனை பார்த்த தேனிக்காரர் கோஷ்டியினர் அதிர்ச்சியடைஞ்சிட்டாங்களாம். ஏற்கனவே கரைவேட்டி கட்ட முடியாத நிலையில நாங்க இருக்கோம். எஸ்கேப் ஆனவங்களை மீண்டும் ஓடிப்போயிட்டாங்கன்னு காட்டி மேலிடத்தில் டோஸ் வாங்க வைப்பதிலேயே குறியா இருக்காங்க. இது தேனிக்காரரை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு, இலைக்கட்சி தலைவரையே ஏமாற்றும் வேலையை செஞ்சிகிட்டு வாராங்க. இவர்களை இலைக்கட்சி தலைவர் எப்படித்தான் நம்பிக்கிட்டிருக்காரோன்னு வேதனையிலும் சிரிக்கிறாங்களாம் தேனிக்காரர் பார்ட்டிகள்..’’ என்றார் விக்கியானந்தா.