பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் துறைக்கு கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி சவுத்திரி வலியுறுத்தினார். இது குறித்து கர்நாடக மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி ஆலோக் மோகனுக்கு மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி சவுத்திரி எழுதியுள்ள கடிதத்தில், ‘பெங்களூருவை சேர்ந்த மமதாசிங் என்பவர் சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் 15ம் தேதி புகார் மனு ஒன்று கொடுத்தார்.
அதில் 2.2.2024 அன்று எனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதையேற்று கொண்ட போலீசார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354 (ஏ) பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும் இப்புகாரை விசாரணை நடத்தி வரும் சிஐடி போலீசார் கடந்த ஜூலை 25ம் தேதி பெங்களூரு விரைவு நீதிமன்றத்தில் சுமார் 750 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் புகார் கொடுத்த மமதாசிங், கடந்த மே 27ம் தேதி பெங்களூரு ஹுளிமாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதித்திருந்ததாகவும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மமதா சிங்கின் மரணத்திலும் உடல் கூறு பரிசோதனை செய்யாமல் இறுதி சடங்கு செய்திருப்பதில் சந்தேகம் இருப்பதால், இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.