* மலேசியாவுக்கு தப்பிக்க முயன்ற போது சென்னை போலீசார் நடவடிக்கை
* மோசடி பணத்தில் தூத்துக்குடியில் 40 ஏக்கர் நிலம் வாங்கியது விசாரணையில் அம்பலம்
சென்னை: சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை ஐயப்பந்தாங்கல் பிரெஸ்டீஜ் பில்லா விஸ்டா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பொன்னரசி (37) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் அருங்குளம், பண்டாரவிளை பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மகன் ராஜா என்ற எஸ்பிஎஸ்.ராஜா (35).
தற்போது, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சாந்தோம் நெடுஞ்சாலை வடக்கு லீத் கோட்டை தெருவில் அவரது மனைவி அனுஷாவுடன் வசித்து வருகிறார். நான் எனது கணவர் அசோக்குமாருடன் வசித்து வருகிறேன். நான் எம்பிபிஎஸ் படித்துள்ளேன். எனது சகோதரர் எஸ்பிஎஸ்.ராஜா மீது நானும் எனது கணவரும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். எனது கணவர் வசதியான குடும்பம் மற்றும் அவரது பெயரில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. எஸ்பிஎஸ்.ராஜா அவரது மனைவி அனுஷாவுடன் சேர்ந்து மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கில் என்னிடமும் எனது கணவரிடமும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார்.
2018 அக்டோபர் மாதம், எஸ்பிஎஸ்.ராஜா இயக்குநராக உள்ள ஓம் மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.80 லட்சம் முதலீடு செய்ய வைத்தார். முதலீடு செய்த நிறுவனம் சென்னை அசோக் நகரில் உள்ளது. அதன் பிறகு தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 சதவீதம் பங்குகள் தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அதை நம்பி எனது கணவரின் பெற்றோருக்கு சொந்தமான பெரும்புதூர் நந்தம் பாக்கத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.11 கோடி எனது சகோதரர் நிறுவனத்தில் முதலீடு செய்தார். பிறகு அந்த பணத்தை எனது கணவருக்கும் தெரியாமல் எஸ்பிஎஸ்.ராஜா நடத்தும் மற்றொரு நிறுவனமான ‘அஷூன் எக்ஸிம்’ நிறுவனத்திற்கு மாற்றிக்கொண்டார். எனது கணவர் ரூ.12 கோடி வரை முதலீடு செய்தார்.
பின்னர் 2021ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ‘கோல்டன்’ என்ற பெயரில் கோல்டன் ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி தொழில் தொடங்க உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, என்னிடம் இருந்த 300 சவரன் நகைகளை பெற்று அதை எஸ்பிஎஸ்.ராஜா தனது பெயரில் அடமானம் வைத்து பணம் பெற்றார். பிறகு அந்த பணத்தை தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் கிராமத்தில் அவரது பெயரில் 40 ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த வகையில் எஸ்பிஎஸ்.ராஜா தொடங்கிய நிறுவனங்களில் மொத்தம் 25 ஆயிரம் பங்குகள் உள்ளது.
அதன் பிறகு எஸ்பிஎஸ்.ராஜா, அவரது மனைவி அனுஷா ஆகியோர் லாபத்தில் பங்கு கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் எனது பெயர் போல் போலியான கையெழுத்துகள் போட்டு கோல்டனில் இருந்து 5 ஆயிரம் பங்குகள் எனது சகோதரன் அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டார். நான் இயக்குநராக உள்ள நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தது போல் கடிதம் தயார் செய்து அதனை ஆர்ஓசிக்கு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து என்னை நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து நீக்கி விட்டு அதற்கு பதிலாக அவரது மனைவி அனுஷாவை நியமித்து ஏமாற்றிவிட்டார்.
மேலும் எஸ்பிஎஸ்.ராஜாவின் அரசியல் எதிர்கால வாழ்க்கைக்கும் எனது கணவர் அசோக் குமார் ரூ.2.75 கோடி பணம் ஐசிஐசிஐ சொத்தை அடமானம் வைத்து கொடுத்தார். அந்த வகையில் எங்களிடம் எனது சகோதரன் எஸ்பிஎஸ்.ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோர் மொத்தம் ரூ.17 கோடி பெற்று ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெரிவித்திருந்தார். புகாரின்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் காயத்திரி மற்றும் இன்ஸ்பெக்டர் கமல்மோகன் ஆகியார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
அதில், அதிமுக முன்னாள் அமைச்சரான சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ்.ராஜா தனது மனைவி அனுஷா உடன் கூட்டு சேர்ந்து தனது சொந்த சகோதரி பொன்னரசியின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், ரூ.17 கோடி பணம் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் 59வது வார்டில் எஸ்பிஎஸ்.ராஜா கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தூத்துக்குடி மாநகராட்சியின் அதிமுக கட்சியின் எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என்பதற்காக தனது சகோதரியின் கணவர் அசோக்குமாரிடம் இருந்து ரூ.2.75 கோடி பணம் பெற்று அந்த பணத்தை செலவு செய்து தூத்துக்குடி மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராக பதவி பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகநாதன் மகனும், தூத்துக்குடி அதிமுக கவுன்சிலரான எஸ்பிஎஸ்.ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா மீது 409, 420, 485, 468, 471, 34 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்து முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் எஸ்பிஎஸ்.ராஜா தலைமறைவாக இருந்து வந்தார். அதேநேரம் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை எஸ்பிஎஸ்.ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா வெளிநாடு சென்று தலைமறைவாக கூடும் என்பதால் லுக் அவுட் நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி எஸ்பிஎஸ்.ராஜா மலேசியா நாட்டிற்கு தப்பி செல்லும் வகையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அவர் மீது ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனே அவரை பிடித்து விமான நிலைய அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் காயத்திரிக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து சென்ற போலீசார் மலேசியா நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற எஸ்பிஎஸ்.ராஜாவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு எஸ்பிஎஸ்.ராஜாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் எஸ்பிஎஸ்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது மனைவி அனுஷா தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகநாதன் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் கைது செய்யப்பட்ட எஸ்பிஎஸ்.ராஜா தற்போது தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். போலீசார் அவரை கைது செய்ததால் அவரது பதவிக்கும் தற்போது ஆபத்து எழுந்துள்ளது.