மதுரை: தமிழகத்தில் பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியதற்கு, கூட்டணி ஆட்சிக்கு யார் சொன்னது? என்று அதிமுக மாஜி அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக இணைந்தது. அப்போது பேட்டியளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்’ என்றார். அருகில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்போது எதுவும் தெரிவிக்கவில்லை. சில நாட்கள் கழித்து, தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று தெரிவித்தார். இது அதிமுக-பாஜ தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதுரை ஒத்தக்கடையில் கடந்த 8ம் தேதி நடந்த பாஜ மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ‘தமிழ்நாட்டில் 2026ல் பாஜ-அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும்’ என அமித்ஷா மீண்டும் வலியுறுத்தி கூறினார். அவரது பேச்சு அதிமுகவினரை கடும் அதிர்ச்சியடைய செய்தது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், நேற்று மதுரையில் அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், ‘‘தமிழ்நாட்டில் பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா பேசியுள்ளாரே?’’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு உதயகுமார், ‘‘எடப்பாடி தலைமையில் இன்றைக்கு மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழ்நாடு மக்கள் வழங்குவதற்கு தயாராகி விட்டனர்.
எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை, எத்தனை திசை திருப்பினாலும், அந்த விஷயத்தில் எடப்பாடியும், நாங்களும் தெளிவாக இருக்கிறோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’’ என மழுப்பலாக பதிலளித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று முன்தினம் மதுரை பைகாராவில் நடந்த அன்னதான விழாவில், ‘‘அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்’’ என தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று நடந்த மேற்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விடும் இடத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்க மாட்டார்.
ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் கட்சி அதிமுக. எங்களிடத்தில் இருக்கும் சிறுபான்மை மக்களை பிரிக்க முடியாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வர வாய்ப்பு இல்லை. அதிமுக கூட்டணி கட்சிகள்தான் ஆட்சியை பிடிக்கும். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஒப்பானவர் எடப்பாடி பழனிசாமி. இவரின் சாதனைகளை நான் ஒரு புத்தகத்தில் தொடராக எழுதி வருகிறேன்’’ என்று தெரிவித்தார்.