டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மாணவர் தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, ேஷக் ஹசீனாவின் அரசு அதிகாரத்தை தக்கவைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்தாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேச அரசின் இடைக்கால தலைவராக ஆகஸ்ட் 8ம் தேதி பொறுப்பேற்றார். அவரது அரசு, ஜனநாயக மாற்றத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில், தேர்தல்களை டிசம்பர் 2025 முதல் ஜூன் 2026 வரை நடத்துவதாக முதலில் அறிவித்தது. இதற்கிடையே இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தடை செய்யப்பட்டது. மேலும் ஜமாஅத்-இ-இஸ்லாமி கட்சியின் தடை உச்ச நீதிமன்றத்தால் கடந்த மே மாதம் நீக்கப்பட்டது. அதனால் அக்கட்சி தேர்தலில் பங்கேற்க வழிவகுத்தது.
இந்நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அளித்த பேட்டியில், ‘வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் முதல் பாதியில் (ஏப்ரல் 1 முதல் 15 வரை) நடைபெறும். தேர்தல் ஆணையம் விரைவில் விரிவான தேர்தல் செயல் திட்டத்தை வெளியிடும். இந்த தேர்தல், புதிய வங்கதேசத்தை உருவாக்குவதற்கான முக்கியமான வாய்ப்பாக அமையும்’ என அவர் கூறினார்.
வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் டிசம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், அடுத்தாண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் என்று யூனுஸ் அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளதால், இதுதொடர்பாக அண்டை நாடான இந்தியா, பிராந்திய பாதுகாப்பு மற்றும் உறவுகளை கருத்தில் கொண்டு, இந்த அரசியல் மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது.