சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணை தொடர்பான ஒப்புதல் விஷயத்தில் ஆளுநர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வௌியிட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்வதற்கான ஆளுநரின் ஒப்புதலை பெறும் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்படி எந்த ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் இருந்து வரவில்லை என்று ஆளுநர் மாளிகை கடந்த ஜூலை 6ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை, தாமதம் செய்கிறார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆளுநர் சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்தார். அந்த பிரமாண பத்திரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணை குறித்து கோப்புகள் வந்துவிட்டது என்றும் அது பரிசீலனையில் உள்ளது
என்றும் 2023 மே 15ம் தேதி ஆளுநர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது மே மாதம் பரிசீலனையில் உள்ளதாகவும் அடுத்த 2 மாதங்கள் கழித்து ஜூலையில் அப்படி எந்த கோரிக்கையும் அரசிடம் இருந்து வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகள் யாரை காப்பாற்ற என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.