நீலகிரி: இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியவரும், பத்ம விபூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவருமான இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் (95), உதகையில் காலமானார்.
பெங்களூருவில் ஜனவரி 5ம் தேதி 1930ம் ஆண்டு பிறந்த எம்.ஆர்.சீனிவாசன் செப்டம்பர் 1955ம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்தார். நாட்டின் பல்வேறு அணு சக்தி நிலையங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள், அது தொடர்பான கொள்கை உருவாக்குவது என அனைத்திலும் இவரது பங்களிப்பு இருந்துள்ளது.
அணுசக்தி வாரிய தலைவர், அணு சக்தி துறை செயலாளர் என பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.ஓய்வுக்கு பிறகு ஊட்டியில் வசித்து வந்த அவர், இன்று (மே 20) தனது 95-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு, விஞ்ஞானிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.