சென்னை: ரூ.17 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19ஆவது வார்டு கவுன்சிலராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். இவர் மீது இவருடன் உடன்பிறந்த அக்கா பொன்னரசு என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் ராஜா, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16% பங்குகளை தருவதாக கூறினார். இதற்காக ஸ்ரீபெரும்புதூர் நந்தம்பாக்கத்தில் உள்ள எனது கணவரது 2 ஏக்கர் சொத்தின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ 11 கோடி பெற்றோம். அந்த பணத்தை எனக்கே தெரியாமல் ராஜாவின் மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டார்.
ராஜா தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொழில் தொடங்குவதாக எங்களிடம் தெரிவித்தார். அதில் முதலீடு செய்தாலும் அதிக பங்குகளை தருவதாக கூறியிருந்தார். இதனால் என்னுடைய 300 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். அதை ராஜா அடமானம் வைத்து பணம் பெற்றார். அந்த பணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் இடத்தினை அவரது பெயரில் வாங்கிக்கொண்டார். மேலும், தனக்கு லாபத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ராஜாவும், அவரது மனைவியும் சேர்ந்து என் கையெழுத்தைப் போலியாகப் போட்டு அவர்களின் நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக ராஜா பெயருக்கு மாற்றிக்கொண்டனர் என அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை அடுத்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொன்னரசி கொடுத்த புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து ராஜா, எந்த நேரத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல நேரிடும் என அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10ம் தேதி மலேசியாவுக்கு தப்பிச் செல்ல சென்னை விமான நிலையம் சென்ற ராஜாவை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட ராஜா, எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்ற நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.