சென்னை: அதிமுக முன்னாள் ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் உதவியுடன் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் என்ற போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதியானது. இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் நடந்த 8 மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். அதேநேரம் இவர் மூலம் கழுகு பட நடிகர் ஒருவரும் போதை பொருள் பயன்படுத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி இரவு தூண்டில் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் இசிஆர் ராஜா (36), அவரது நண்பரான அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் (33), தொழிலதிபர் கணேஷ்குமார், தனசேகர் ஆகியோர் மது அருந்தினர். அப்போது அருகில் மது அருந்திக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற கூடுதல் டிஎஸ்பி மகன் செல்வா தரப்புக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இரு தரப்பும் பாட்டிலால் தாக்கிக் கொண்டனர். பாரில் இருந்த சேர்கள், மேஜைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த மோதல் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இந்த மோதல் தொடர்பாக இசிஆர் ராஜா, அதிமுக நிர்வாகி அஜய்வாண்டையார், அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பிரசாத், முன்னாள் கூடுதல் டிஎஸ்பி மகன் செல்வா என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோதலை தொடர்ந்து அதிமுகவில் இருந்து ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் நீக்கப்பட்டார். பிரசாத்திடம் விசாரணை நடத்திய போது சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்ற பிரடோ (38) என்பவரிடம் இருந்து அதிகளவில் கொக்கைன் என்ற போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் பிரசாத் கொக்கைன் வாங்க அடிக்கடி பிரதீப்குமாரிடம் பேசியது உறுதியானது. அந்த வாக்குமூலத்தின்படி, பெங்களூருவில் வசித்து வரும் பிரதீப்குமாரை கைது செய்தனர். இவருக்கு கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக மேற்கு ஆப்பிரிக்கா கானா நாட்டைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை தனிப்படையினர் கடந்த 17ம் தேதி ஒசூரில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 கிராம் கொக்கைன், ஒரு செல்போன், ரூ.40 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கொக்கைன் விற்பனை குறித்து பிரதீப்குமாரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அடிக்கடி அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்திடம் பேசியது தெரியவந்தது. போலீசார் பிரதீப்குமாரிடம் விசாரணை நடத்திய போது, முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத், ‘தீங்கிரை’ என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். இவர்கள் படம் ஷூட்டிங் எடுக்கும்போது கொக்கைன் என்ற போதைப் பொருள் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அதன்படி நான், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரிடம் இருந்து வாங்கிக் கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். அடிக்கடி கேட்பார்கள். கேட்கும்போதெல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளேன். நடிகர் ஸ்ரீகாந்த் தனியாக எனக்கு வாட்ஸ் அப் அழைப்பு மூலம் கொக்கைன் கேட்பார். அதன்படி நான் அவருக்கு ஜான் மூலம் வாங்கி கொடுத்தேன். அந்த வகையில் இதுவரை நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு கடந்த 2023ம் ஆண்டு முதல் 40 முறை கொக்கைன் விற்பனை செய்து வந்துள்ளேன்.
இதனால் ஸ்ரீகாந்த் அவரது ஜி பே மூலம் ரூ.4.72 லட்சம் அனுப்பினார். நடிகர் ஸ்ரீகாந்த் பயன்படுத்தும் கொக்கைன் உயர் ரகம் கொண்டது. ஒரு கிராம் ரூ.12 ஆயிரம். அவருக்கு நான் நேரடியாக கொக்கைன் கொண்டு வந்து கொடுப்பேன். அவர் வாங்கிய உடனே எனது முன்னிலையிலேயே கொக்கைனை பயன்படுத்துவார். அதை பலமுறை பார்த்துள்ளேன். ஸ்ரீகாந்த் நடிகர் என்பதால் அவர் எப்போது கொக்கைன் கேட்டாலும் நானே, ஜானிடம் வாங்கி வந்து சென்னையில் அவரை சந்தித்து கொடுத்துவிட்டு செல்வேன் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று காலையில் சென்றனர். வீட்டில் இருந்த ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரித்தனர். அதில், அவர் கொக்கைன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசார் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து 8 மணி நேரத்திற்கு மேல் விசாரித்தனர். இந்த விசாரணையில், அவரது செல்போனை பறிமுதல் செய்து கொக்கைன் வாங்கியது உண்மையா என அவரது ஜிபே செயலியை ஆய்வு செய்தனர். அதில், நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப்குமார் மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் ஆகியோருக்கு அடிக்கடி பணம் அனுப்பி இருந்தது உறுதியானது.
மேலும், ஸ்ரீகாந்த் தனது நண்பர்களான திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகள் சிலருக்கும் கொக்கைன் விற்பனை செய்ததும் தெரியவந்தது. ஸ்ரீகாந்த் பரிந்துரைப்படி சில நேரங்களில் கொக்கைன் விற்பனை செய்த பிரதீப்குமார் மூலம் கழுகு திரைப்பட நடிகர் ஒருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததும் உறுதியாகி உள்ளது. இதுபோல் நடிகர் ஸ்ரீகாந்த் மூலம் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் இரவு நேர மதுபான பார்ட்டிகள் மற்றும் திரைப்பட பார்ட்டிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து போலீசார், போதைப்பொருள் பயன்படுத்தியது உண்மையா என பரிசோதனை செய்யும் வகையில், நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தலைமை டாக்டர்கள் முன்னிலையில் ஸ்ரீகாந்த்தின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இரவு 8.50 மணிக்கு பரிசோதனை முடிந்தது. இந்த பரிசோதனையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதுதொடர்பான அறிக்கையை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு அளித்தனர். பின்னர் போதைப்பொருள் பயன்படுத்தியது சாட்சிகள் மற்றும் ஆய்வுகள் மூலம் உறுதியானதை தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்திய வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்த்து நேற்று மாலை அதிரடியாக நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
போதை பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்திய வழக்கில் முன்னணி நடிகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர், நடிகைகள் சிக்குகின்றனர்
கொக்கைன் இந்தியாவில் தடை ெசய்யப்பட்டுள்ளது. இதனால் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கொக்கைன் விற்பனை செய்தாலோ அல்லது கொக்கைன் பயன்படுத்தினாலோ அது குற்றமாக கருதப்படும். எனவே நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் பயன்படுத்தியதால், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளியாக கருதப்படுகிறார். அதன்படி தான் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மூலம் கொக்கைன் போதைப்பொருள் பெற்று பயன்படுத்தி வந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்களை ஸ்ரீகாந்த் பயன்படுத்திய செல்போனில் இருந்து போலீசார் எடுத்துள்ளனர். இதனால் விரைவில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக கழுகு திரைப்பட நடிகர் தற்ேபாது கேரளாவில் படப்பிடிப்பில் உள்ளதால் அவரை நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.