சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், மீட்பு பணிகளுக்காகவும், 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் சென்னை காவல் பேரிடர் மீட்பு குழு கலந்தாய்வு நடைபெற்றது.
12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மீட்பு குழுவும் ஒரு தலைமைக்காவலர் தலைமையில் 10 காவலர்கள் இருப்பர். ஒவ்வொரு மீட்பு குழுவுக்கும் மீட்பு பணிகளுக்காக தலா ஒரு வாகனம் என 12 வாகனங்களும். ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், கயிறு, உட்பட 21 மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மழைநீர் தேங்கி போக்குவரத்து இடையூறு உள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்தும், மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பலத்த காற்று அல்லது புயலின் போது விழும் அல்லது உடைந்து போகக்கூடிய மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டுங்கள். நீங்கள் இருக்கும் இடம் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கவும். பொதுமக்கள் சாலையில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும். வாகனங்களை ஓட்டும் போது, பிரேக்குகளை சரிபார்க்கவும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனம் ஓட்ட வேண்டாம். வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்.
வாகனங்களில் செல்லும் போது குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவும், பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும், வெளியில் செல்வதை தவிர்க்கவும். மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம், பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள். வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உடனுக்குடன் எச்சரிக்கைகளைப் பின்பற்றவும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்படாதீர்கள். மாவட்ட பேரிடர் மீட்புப் படை குழு எந்த ஒரு துயரச் சூழலையும் கையாள தயாராக உள்ளது. அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண் 100ஐ அழைக்கவும். சென்னை காவல்துறையினர் போர்க்கால அடிப்படையில் சேவை செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளனர். இவ்வாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.