நாமக்கல்: நாமக்கல் அருகே சிலுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எட்டிக்கண்(72). இவருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை, திருச்செங்கோடு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி(64), 2 ஆண்டுக்கு முன் போலி ஆவணம் தயார் செய்து தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த நிலத்தை பல்வேறு பிளாட்டுகளாக பிரித்து, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என 4 பேருக்கு எழுதிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிளாட்டுகளுக்கு, சிலுவம்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற விண்ணப்பித்தபோது, இந்த முறைகேட்டை எட்டிக்கண் கண்டுபிடித்துள்ளார். அவரது புகாரின்படி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். எட்டிக்கண் வசம் இருந்த நிலத்தின் அசல் பத்திரங்களை ஆய்வு செய்த போது, போலி ஆவணங்கள் தயார் செய்து, மாஜி எம்எல்ஏவின் கணவர் பொன்னுசாமி மற்றும் 4 பேர் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொன்னுசாமி உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டிஎஸ்பி வின்சென்ட் தலைமையிலான போலீசார், பொன்னுசாமியை கைது செய்ய நேற்று திருச்செங்கோடு ராஜீவ் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அதற்குள் அவர் வெளியே சென்று விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொன்னுசாமிபல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.