புதுச்சேரி: போலி கால் சென்டர்கள் நடத்தி ரூ.56 கோடி மோசடி செய்த 7 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சுருட்டிய பணத்தில் பங்களா, ரிசார்ட் வாங்கி குவித்தது அம்பலமாகியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்குசந்தையில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி கோகிலாவும், பங்குசந்தையில் முதலீடு செய்ய படிவத்தை நிரப்பி அனுப்பியுள்ளார்.
பின்னர் பெங்களூருவில் உள்ள குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கோகிலாவை தொடர்பு கொண்டு பங்குசந்தையில் ஆட்டோமெட்டிக் ரோபோடிக் சாப்ட்வேர் மூலம் டிரேடிங் செய்து சம்பாதிக்கலாம் என கூறியுள்ளது. இதை நம்பி கோகிலா கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்து, ஏமாந்துள்ளார். இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடந்த 2 மாதங்களாக பல்வேறு இணைய வழி, தொழில்நுட்பம் உதவியுடன் பணம் பரிவர்த்தனை, வாட்ஸ் அப் மற்றும் இணையதளத்தில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் பெங்களூரு மற்றும் நெய்வேலியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைந்தது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த தூபைல் அகமது, பிரவீன், முகமது அன்சார், நெய்வேலியை சேர்ந்த ஜெகதீஷ், ராமச்சந்திரன், பிரேம் ஆனந்த், விமல் ராஜ் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர்களை, புதுவைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், துபாயை தலைமை இடமாக கொண்டு குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கடந்த 2014 முதல் இயங்கி வருவது தெரியவந்தது. இந்தியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் கால் சென்டர்கள் அமைத்து, 200க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளனர். மோசடிக்கு முக்கிய குற்றவாளியான நெய்வேலியை சேர்ந்த நவ்ஷத் கான் அகமது என்பவர் துணையாக இருந்துள்ளார். அவருடைய மனைவி சவுமியா, நாமக்கல்லில் உள்ள கால் சென்டருக்கு உரிமையாளராக இருந்துள்ளார்.
இதில் தொடர்புடைய மேலும் 5 பேர், தற்போது துபாயில் உள்ளனர். பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்திய கால் சென்டர்கள் பதிவு செய்யப்பட்ட இடத்தில் இயங்கவில்லை என்றும், அவர்களை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு இன்டர்நெட்டை (விபிஎன்) பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும், பொதுமக்களை ஏமாற்றிய பணத்தில் பெங்களூருவில் சொகுசு பங்களா, ஏற்காடு, புதுச்சேரி மற்றும் கொடைக்கானலில் ரிசார்ட் வாங்கி உள்ளனர். இவர்களிடம் இருந்து 4 சொகுசு கார், 1 பைக், ஈச்சர் வேன், 100க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், வங்கி பாஸ்புக் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 3 வங்கி கணக்குகளில் மட்டும் கடந்த 9 மாதங்களில் ரூ.56 கோடி மோசடி செய்யப்பட்ட பணம் வந்துள்ளது. இதில் ரூ.27 கோடி உள்ள ஒரு வங்கி கணக்கை மட்டும், இந்தியா முழுவதும் உள்ள இணையவழி போலீசார் முடக்கி உள்ளனர். இதுகுறித்து அனைத்து மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இவர்கள் இந்தாண்டு மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 1,57,346 நபர்களின் விவரங்களை பெற்றுள்ளனர். அதில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். தொடர்ந்து, அங்கு பணிபுரிந்த ஊழியர்களையும் இவ்வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.