சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும், மக்கள் சிரமமின்றி பயணம் செய்வதிலும் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- வேளச்சேரி (தற்போது சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி), சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை ஆகிய முக்கிய வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் இந்த புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முதல் வகுப்பு, மகளிர் மற்றும் சாதாரண வகுப்பு என்று மூன்று வகையில் பெட்டிகள் உள்ளன. முதல் வகுப்பில் கட்டணம் கூடுதலாக இருக்கும். மற்ற வகுப்புகளில் ஒரே மாதிரி தான் உள்ளது.
இந்த புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்தால் ஐடி ஊழியர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோர், வயதானவர்கள் என பலரும் கார்களில் செல்லாமல் புறநகர் ரயில்களில் பயணிப்பதை அதிகம் விரும்புவார்கள் என்றும், இதன்மூலம் மின்சார ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றும், ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை பரிசீலித்த தெற்கு ரயில்வே, சோதனை அடிப்படையில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில் சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்கபடும் எனவும், முதற்கட்டமாக தற்போது 2 முதல் 3 ஏசி பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது: சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி ரயில் பெட்டி இணைக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. அதன்பேரில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெற்கு ரயில்வேக்கு மின்சார ரயிலில் குளிர்சாதன பெட்டிகளை இணைக்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, மும்பை மின்சார ரயிலுக்கு சென்னை ஐசிஎப்பில் இருந்து குளிர்சாதன பெட்டிகள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.
அதேபோல, தமிழகத்தில் முதன்முறையாக சென்னை புறநகர் மின்சார ரயில்களுக்கும் குளிர்சாதன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2 முதல் 3 பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து அடுத்தகட்டமாக கூடுதலாக குளிர்சாதன பெட்டிகளை இணைப்பது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது நீண்ட தூரம் பயணம் செய்யப்படும் சென்னை கடற்கரை- திருமால்பூர், அரக்கோணம் – சென்னை சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயிலில் இந்த குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் ஏராளமான பயணிகள் பயன்பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.