சென்னை: வனத்துறை – இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம் அமைச்சர்கள் பெருமக்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் பி. கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் இன்று (10.06.2025) தலைமைச் செயலகத்தில் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரை மாவட்டம், சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் எளிதாக சென்றுவர ஏதுவாக மலைப்பாதை அமைத்தல், வழுக்கும் பாறைகள் அமைந்துள்ள இடங்களில் கைப்பிடிகள், மலைமீதுள்ள ஏழு ஓடைகளில் இரும்பு பாலங்கள் அமைத்தல், அன்னதானக் கூடம் மற்றும் பக்தர்கள் தங்குமிடம் கட்டுதல், அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் முதல் மலைமேல் அமைந்துள்ள அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் வரை சாலையை சீரமைத்தல், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை அமைத்தல், ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்திடும் வகையில் நிலம் வழங்குதல், கோவை மாவட்டம், பெரியதடாகம் அருள்மிகு அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கம்பிவட ஊர்தி அமைத்திட வனத்துறைக்கு சொந்தமான நிலம் வழங்குதல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கெஜஹட்டி, அருள்மிகு ஆதிகருவண்ணராயர் திருக்கோயில், கொங்கஹள்ளி, அருள்மிகு மல்லிகார்ஜுனசாமி திருக்கோயில், கோவை மாவட்டம், பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில், மதுக்கரை வட்டம். மரப்பாலம், அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், தருமபுரி மாவட்டம். தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில், வே.முத்தம்பட்டி, அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நெருப்பூர். அருள்மிகு முத்தித்தராயசுவாமி திருக்கோயில் மற்றும் திம்மராயசுவாமி திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு காட்டழகர் மற்றும் பேச்சியம்மன் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம். இராமேசுவரம். அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலின் உபக்கோயிலான அருள்மிகு இரட்டைத்தாளை முனியசாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் மலைப்பாதை உரிமைக் கட்டணம், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிட நிலஉரிமை மாற்றம். திருக்கோயில்களில் மராமத்து பணி மேற்கொள்ள அனுமதி.
திருக்கோயிலை சுற்றியுள்ள வனத்துறை நிலங்களுக்கான குத்தகை காலம் நீட்டித்தல், கிரிவலப் பாதையை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டு. இப்பொருண்மைகள் தொடர்பாக வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.