ஏற்காடு: ஏற்காடு வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால், உணவு மற்றும் குடிநீர் தேடி காட்டெருமைகள் மலைக்கிராமங்களுக்கு வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஏற்காடு பிரதானமாக திகழ்ந்து வருகிறது. ஏற்காடு மலையில் 67 கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்காடு மலைப்பகுதியில் காட்டெருமைகள், மான், கீரி, நரி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இங்குள்ள காபி எஸ்டேட்டில் மிளகு ஊடு பயிராக விளைவிக்கப்படுகிறது. பேரிக்காய், சாத்துகுடி, தேக்கு, சந்தனம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையில், ஏற்காடு மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள சிவுநீர் குட்டை, தடுப்பணைகளில் நீர் வற்றி வருகிறது. இதனால், வன விலங்குகள் தண்ணீரை தேடி அவ்வப்போது ஊருக்குள் வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஏற்காடு அரசு மருத்துவமனை அருகே, பெரிய காட்டெருமை ஒன்று சாலையில் உலா வந்ததால், இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தற்போது, கடும் வறட்சியால் ஏற்காடு குண்டூர், ஜரீனாகாடு, கரடியூர், நாகலூர், வாழவந்தி உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் காட்டெருமைகள் புகுந்து மக்களை அச்சமடைய செய்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்காடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறும்போது, “ஏற்காடு மலைப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை வனத்துறையினர் நிரப்பினால், வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியும். எனவே, வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து கிராம மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.