பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே வாழைகளை சேதப்படுத்திய 6 யானைகளை இரவில் வெடி வெடித்தும், சைரன் ஒலித்தும் வனத்துறையினர் காட்டுக்குளு் விரட்டியடித்தனர். இதற்கிடையே யானைகளிடம் இருந்து காத்து கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு வனத்துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டம் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி மலையில் உள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிவார பகுதிக்கு வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூதப்பாண்டி அருகே மலை கிராமமான உடையார் கோணத்தில் உள்ள தோட்டத்தில் புகுந்த 6 யானைகள் அடங்கிய கூட்டம் புகுந்தது. பின்னர் அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகளை தின்றும், முறித்தும் சேதப்படுத்திவிட்டு மீண்டும் மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டன. வாழைகளை சேதப்படுத்தியதால் கவலை அடைந்த விவசாயிகள் யானைகள் நடமாட்டத்தால் அச்சம் அடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் யானை கூட்டம் கிராமத்துக்குள் வரும் என்பதால் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் உடையார் கோணத்துக்கு கிராமத்துக்கு சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு முதல் உள்ளூர் மக்கள் துணையுடன் வனத்துறையின் சம்பவ இடத்திற்கு சென்று வெடி வெடித்தும், சைரன் ஒலித்தும் யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானை கூட்டத்தை பொதுமக்கள் யாராவது பார்த்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும், விவசாயிகள் இரவில் தோட்டங்களில் தங்க வேண்டாம் என்றும், தனியாக மலைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் சில கட்டுப்பாடுகளை வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி
உள்ளனர்.