*நிரந்தரமாக கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படுமா?
புதுக்கோட்டை : கூட்டுடன்காட்டில் ஓலை கொட்டகையில் உள்ள பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு நிரந்தரமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி யூனியன் அலுவலகம் அருகில் தூத்துக்குடி – பாளை. நெடுஞ்சாலையில், கூட்டுடன்காடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்லவும் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து தூத்துக்குடி, வைகுண்டம், நாசரேத், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர்.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கூட்டுடன்காடு பஸ் நிறுத்தத்தில் நிரந்தர பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் வெயிலில் கடும் அவதிக்குள்ளான இப்பகுதி மக்களே, பஸ்சுக்கு காத்திருக்கும் பகுதியில் தென்னை ஓலையால் சிறிய அளவில் கொட்டகை அமைத்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ள இந்த ஓலை கொட்டகையையும் சிலர் பயம் காரணமாக பயன்படுத்தாமல் சாலையோரத்திலேயே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே ஓலை கொட்டகையை அகற்றிவிட்டு இப்பகுதியில் நிரந்தர பயணிகள் நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.