புதுடெல்லி: பேடிஎம் நிறுவனம் மேற்கொண்ட ரூ.611 கோடி பரிவர்த்தனையில் அந்நிய செலாவணி விதிமீறல் இருப்பதாக விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமென்ட் தளங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன், அதன் நிர்வாக இயக்குநர் விஜய் சேகர் சர்மா, துணை நிறுவனங்களான லிட்டில் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட், நியர்பை இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவைகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீசில் ரூ.611 கோடிக்கான பரிவர்த்தனையில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டங்கள் மீறப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட சரியான விலை நிர்ணய வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் பேடிஎம் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீட்டை பெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கூறி உள்ளது. இதுதொடர்பாக, ஒன்கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ரூ.245 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள், லிட்டில் இன்டர்நெட் நிறுவனத்தின் ரூ.345 கோடி பரிவர்த்தனைகள், நியர்பை நிறுவனத்தின் ரூ.21 கோடி பரிவர்த்தனைகள் சந்தேக வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையின் நோட்டீசை தொடர்ந்து பங்குச்சந்தையில் பேடிஎம் பங்குகள் நேற்று ஆரம்பத்தில் சரிவை சந்தித்தாலும் மார்க்கெட் முடிவில் 2 சதவீத உயர்வை கண்டன.